ஆராய்ச்சியை காப்பியடித்து தீசிஸ் சமர்பித்தால் டாக்டர் பட்டம் கொடுக்க முடியாது என மத்திய அமைச்சர் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
ஒருவர் செய்த முனைவர் பட்ட ஆராய்ச்சியினை திருடி சமர்பிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதை முற்றிலும் ஒழிப்பதற்காக புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம். தீசிஸ் மற்றும் ஆராய்ச்சிகளை காப்பி அடித்து வேறொரு ஆராய்ச்சியாக சமர்ப்பிக்கும் அறிவுசார் திருட்டினை தடுத்து நிறுத்த புதிய செயலிகளை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது. அதில் டர்னிட்டின் என்ற மென்பொருள் மிக முக்கியமான ஒன்றாகும்.
'டர்னிட்டின்’ (Turnitin) போன்ற மென்பொருள்களை பயன்படுத்தினால் என்னென்ன தலைப்பின் கீழ் ஆராய்ச்சிகள் நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ள இயலும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சீரடியில் பத்திரிக்கையாளார்களை சந்தித்த போது தெரிவித்தார். “மற்றவருடைய தீசிஸினை காப்பியடித்து பட்டத்திற்காக சமர்ப்பித்திருப்பது தெரியவந்தால் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட மாட்டாது.” என்றும் அவர் கூறினார்.
டர்னிட்டின் (Turnitin) என்றால் என்ன?
டர்னிட்டின் என்பது அறிவுத்திருட்டினை (Plagiarism) முற்றிலுமாக தடுப்பதற்காக அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட மென்பொருளாகும். உலக அளவில் பல்வேறு நாடுகளில் அறிவுத்திருட்டினை கண்டுபிடிப்பதற்காக பரவலாக மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். டர்னிட்டின் தன்னுடைய இணைய தளத்தில் “20 பில்லியன் இணைய தளங்கள், 220 மில்லியன் மாணவர்கள், 90, 000 புதிய ஆராய்சிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது” என்றும், மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை துறைசார் வல்லுநர்கள் வழங்குவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றது.
இந்த மென்பொருள் ஒவ்வொரு ஆராய்ச்சியையும் மற்றொன்றோடு ஒப்பீடு செய்து வெளியிடும். அதனை படித்துப் பார்த்து அந்த ஆராய்ச்சி காப்பி அடிக்கப்பட்டதா அல்லது புதியதா என்பதையெல்லாம் நாம் தான் கண்டறிய வேண்டும். டர்னிட்டின் போன்ற மென்பொருள்கள் ஓரளவிற்கு இதனைக் கட்டுப்படுத்துமே தவிர இதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்துவது என்பது மிகப் பெரும் சவாலான காரியம். அது மனிதர்களின் ஒத்துழைப்பின்றி சரி செய்வது மிகவும் கஷ்டம் என்றும் அறிவித்திருக்கின்றார் ஜவடேகர்.