மீண்டும் உயிர்த்தெழுமா விக்ரம் லேண்டர்? - செப்.17 அன்று புதிய தகவல்களை வெளியிடும் நாசா

இஸ்ரோவால் அனுப்பி வைக்கப்பட்ட சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய தளத்தை சுற்றியுள்ள பகுதிகளை நாசா பகிர்ந்து கொள்ளும்

Amitabh Sinha

இஸ்ரோவின் சந்திரயான் – 2, கடந்த செப்.7ம் தேதி நிலவில் தரையிறங்கும் போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக சமிக்ஞையை இழந்தது. லேண்டர் விக்ரம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க தேவையான வேகத்தை விட அதிக வேகத்தில் கீழிறங்கியது. நிலவின் மேற்பரப்பில் சுமார் 2.1 கி.மீ தூரத்தில் சந்திரயான் 2 தரையிறங்கும் போது சிக்னல் துண்டிக்கப்பட்டது.

ஏற்கனவே ஆர்பிட்டர் மூலமாக லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளது. அதனிடம் இருந்து சமிக்ஞைகளை பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

லேண்டரில் பொருத்தப்பட்டிருக்கும் சில முக்கிய கருவிகள் தானாகவே சிக்னல்கள் அனுப்பக் கூடியவை. அவை, அதற்கு அருகில் இருக்கும் விண்வெளி மையம் அல்லது செயற்கைக் கோள்களால் பெற இயலும். 14 நாட்களுக்கு மட்டுமே வேலை செய்யும் வகையில் அவை உருவாக்கப்பட்டிருப்பதால் வரும் இரண்டு வாரங்களில் முழுமையாக சிக்னல்களைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதன் பின்பு நிலவில் நிலவும் அசாதாரண குளிர் காரணமாக வேலை செய்யாமல் போகும் நிலை உருவாகும்.

இந்நிலையில், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்தும் இஸ்ரோவின் முயற்சிக்குக் கைக்கொடுக்கும் விதமாக நாசாவும் இதில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரோவின் ஒப்புதலைப் பெற்று விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த நாசா முயற்சி செய்து வருகிறது.

இந்த முயற்சியின் முக்கிய நகர்வாக, நாளை (செப்.17) விக்ரம் லேண்டர் குறித்த புதிய தகவலை நாசா வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாசாவின் சந்திர புலனாய்வு ஆர்பிட்டரான (எல்.ஆர்.ஓ) விக்ரம் லேண்டரை படம் எடுத்து வெளியிட வாய்ப்புள்ளது என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “இஸ்ரோவால் அனுப்பி வைக்கப்பட்ட சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய தளத்தை சுற்றியுள்ள பகுதிகளை நாசா பகிர்ந்து கொள்ளும்” என்று LRO ன் திட்ட விஞ்ஞானி நோவா பெட்ரோ மேற்கோளிட்டு spaceflightnow.com கூறியுள்ளது.

சந்திரயான்-2 நிலவில் இறங்கியிருந்தால் நிலவின் ஒரு பகல் பொழுது(Lunar Day) மட்டுமே அங்கு ஆராய்ச்சி செய்திருக்கும். அதாவது 14 நாள்கள், அதன்படி வரும் செப்டம்பர் 20, 21-ம் தேதியோடு நிலவின் ஒரு பகல் பொழுது முடிகிறது. அதற்குள் விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் முயற்சிக்கு உதவும் வகையில் நாசாவும் இணைந்து நாளை சில தகவல்களை வெளியிட இருக்கிறது.


முன்னதாக, பெங்களூரு இஸ்ரோ மையத்தில், விக்ரம் லேண்டர் சிக்னல் துண்டிப்பு குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் மைக் மூலம் தழுதழுத்த குரலில் தெரிவித்தார். இதையடுத்து பிரதமர் மோடி, விஞ்ஞானிகள் மத்தியில் பேசுகையில் நம்பிக்கையூட்டினார். அப்போது அவர் ‘சந்திரயான்-2 விண்கலத்தின் தடைகளால் சோகமடைய வேண்டாம் என்றும் விஞ்ஞானிகளுக்கு புதிய விடியல் காத்திருக்கிறது’ என்றார்.

தொடர்ந்து காரில் ஏறுவதற்கு முன்பு பிரதமர் மோடி, சிவனுக்கு கைகுலுக்கி விடைபெற முயன்றார். அந்த சமயத்தில் சிவன், சந்திரயான்-2 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் நிகழ்வு பின்னடைவை சந்தித்ததை நினைத்து திடீரென்று கண்ணீர்விட்டு அழுதார். இதனால், பிரதமர் மோடி, சிவனை கட்டியணைத்து முதுகில் தட்டிக்கொடுத்தபடி ஆசுவாசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close