அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2024-ம் ஆண்டு இந்திய விண்வெளி வீரர் ஒருவரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளது. இந்நிலையில், தேர்ந்தெடுக்கப்படும் வீரருக்கு நாசா பயிற்சி அளிக்கும் என்று அந்த அமைப்பின் நிர்வாகி பில் நெல்சன் தனது டெல்லி பயணத்தின் போது தெரிவித்தார்.
இந்தியாவை "சிறந்த எதிர்காலப் பார்ட்னர்" என்று குறிப்பிட்ட நெல்சன், இந்திய விண்வெளி நிலையம் அமைக்க அமெரிக்கா உதவ தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார். 2035-க்குள் விண்வெளியில் இந்திய விண்வெளி நிலையம் அமைக்க வேண்டும் என்றும் 2040-க்குள் நிலவுக்கு மனிதரை அனுப்ப வேண்டும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி முன்பு அறிவுறுத்தியிருந்தார்.
நெல்சன் மேலும் கூறுகையில், "2031-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தை டீ-ஆர்பிட் செய்ய உள்ளோம். அந்த நேரத்தில் வணிக விண்வெளி நிலையங்கள் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாங்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்கவோ அல்லது ஒத்துழைக்கவோ இந்தியா விரும்பினால், நிச்சயமாக நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.
மேலும், 2024-ல் ஏவப்படும் NISAR செயற்கைக் கோள் இந்தியா-அமெரிக்க ஒத்துழைப்பில் இருந்து வெளிவரும் மற்றொரு முக்கிய திட்டமாகும் என்று நெல்சன் கூறினார்.
"இது ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தது ... இந்திய விண்வெளி வீரருக்கு பயிற்சி அளிக்க நாசா உதவும். அந்த விண்வெளி வீரர் 2024 ஆம் ஆண்டு இறுதியில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்வார்" என்று நெல்சன் தெரிவித்தார்.
விண்வெளி வீரரை இஸ்ரோ தேர்வு செய்யும். ககன்யான் திட்டத்திற்கு பயிற்சி பெற்று வரும் 4 விண்வெளி வீரர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம். அந்த விண்வெளி வீரர் 2 நாள் ஐ.எஸ்.எஸ்-ல் தங்கி ஆய்வு செய்வார். இரண்டு வார கால பணிக்கான அறிவியல் நோக்கங்கள் இந்தியாவால் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நெல்சன் மற்றும் மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் சந்திப்பிற்குப் பிறகு விண்வெளித் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கதிர்வீச்சு தாக்க ஆய்வுகள், மைக்ரோ விண்கற்கள் மற்றும் சுற்றுப்பாதை சிதைவுக் கவச ஆய்வுகள், விண்வெளி சுகாதாரம் மற்றும் மருத்துவம் குறித்து இரு விண்வெளி நிறுவனங்களின் கூட்டுப் பணிக்குழு ஆய்வு செய்து வருகிறது என்று கூறப்பட்டடுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.