அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஜூலை 24ம் தேதி ஒரு மிகப் பெரிய விண் கல் “விண்கல் 2020 ND” பூமியைக் கடக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஜூலை 24ம் தேதி ஒரு மிகப் பெரிய விண் கல் “விண்கல் 2020 ND” பூமியைக் கடக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை நமது பூமி கிரகத்தைத் மேலும் 2 விண் கற்கள் தாண்டிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன. நாசா அந்த இரண்டு விண் கற்களுக்கும் 2016 DY30 மற்றும் 2020 ME3 என்று பெயரிட்டுள்ளது.
இந்த விண் கற்கள் ‘அபாயகரமான விண் கற்கள்’ (PHA) என்று தற்போது வரையறுக்கப்பட்டுள்ளன. அது பூமிக்கு அச்சுறுத்தும் வகையில் நெருங்கிவரும் விண் கற்களின் திறனை அளவிடும் அளவுருக்கள் அடிப்படையில் வரையறை செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, 0.05 வானியல் அலகு அல்லது அதற்கும் குறைவான சுற்றுவட்டப் பாதை தூரம் கொண்ட அனைத்து விண்கற்களும் அபாயகரமான விண் கற்ககளாக கருதப்படுகின்றன என்று நாசா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாசாவின் கூற்றுப்படி, 2020 ND விண் கல் 170 மீட்டர் நீளமுடையது. நமது பூமி கிரகத்திற்கு 0.034 வானியல் அலகுகளில் (5,086,328 கிலோமீட்டர்) அளவுக்கு நெருக்கமாக இருக்கும். இந்த விண் கல் மணிக்கு 48,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து வருகிறது. இந்த விண் கல் பூமிக்கு அருகே வருகிற தூரம் “ஆபத்தானது” என்று வகைப்படுத்துகிறது.
2016 DY30 பூமியின் திசையில் மணிக்கு 54,000 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. அதே நேரத்தில் 2020 ME3 மணிக்கு 16,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. இந்த இரண்டு விண் கற்களில் 2016 DY30 என்பது 15 அடி அகலத்தில் இருப்பதால் இது ஒரு சிறிய விண் கல் ஆகும்.
நாசாவின் பூமிக்கு அருகிலுள்ள பொருள்களின் ஆய்வு மையம் (சி.என்.இ.ஓ.எஸ்), 2016 DY30 பூமிக்கு சுமார் 0.02306 வானியல் அலகுகள் வரையில் அதாவது சுமார் 3.4 மில்லியன் கிலோமீட்டர் வரை நெருங்கி வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த பெரிய விண் கற்கள் மிக நெருக்கமாக வருவது ஜூலை 19 ம் தேதி காலை 10 மணி அளவில் நிகழும். இந்த விண்கல் சூரியனை சுற்றி பயணம் செய்யும் போது பூமியின் பாதையை கடக்கிறது என்பதால் இது ஒரு அப்பல்லோ விண் கல் என்று வகைப்படுத்தப்படுகிறது.
2020 ME3 விண் கல் பூமியிலிருந்து மிக தொலைவில் இருக்கும். இது ஜூலை 21ம் தேதி பூமி கிரகத்திற்கு மிக நெருக்கமாக வரும். இந்த சிறிய விண் கல் நெருக்கமாக வரும் தூரம் பூமியிலிருந்து சுமார் 0.03791 வானியல் அலகுகள் என்று கணிக்கப்பட்டுள்லது அதாவது, சுமார் 5.6 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த விண் கல் பூமியின் பாதையை கடக்காததால் அமோர் விண் கல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பல சந்தர்ப்பங்களில் பூமிக்கு அருகில் மட்டுமே பறந்து செல்கின்றன.
இருப்பினும் இந்த 2 விண் கற்கள் நமது பூமி கிரகத்துக்கு அச்சுறுத்தலாக இல்லை.
நாசா இது போன்ற பொருள்களை பூமிக்கு அருகிலுள்ள பொருள்கள் என வகைப்படுத்துகிறது. ஏனெனில், இந்த விண்வெளிப் பொருட்கள் மற்ற கிரகங்களின் ஈர்ப்புசக்தியின் ஈர்ப்பால் பாதிக்கப்படுகின்றன. இதன் விளைவாக அவை நமது சூரிய மண்டலத்திற்கு அருகாமையில் உள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"