Net Neutrality: இணைய சமநிலைக் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது தொலைத்தொடர்பு ஆணையம். மத்திய அரசும் ஆதரிக்கிறது. இதனால் உங்களுக்கு என்ன லாபம்?
Net Neutrality என்கிற இணைய சமநிலை தொடர்பான பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டது மத்திய அரசு. மேலும் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இணையம் சமமாக பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.
இதன் மூலம் தனியார் இணையவசதி அளிக்கும் நிறுவனங்கள் கூடுதல் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு, அதிவேக இணைய சேவையினை தருவது முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Net Neutrality: இணைய சமநிலை என்றால் என்ன?
2017ம் ஆண்டு நவம்பர் மாதம் இணைய சமநிலைக் கொள்கைகள் பற்றி மத்திய அமைச்சகத்திடம் அறிக்கை சமர்பித்தது மத்திய தொலைத் தொடர்பு நிறுவனம்.
இந்த கொள்கைகள் மூலமாக, வாடிக்கையாளர்களுக்கு இணைய சேவையினை பயன்படுத்துவதற்கு தனியார் நெட்வொர்க் ப்ரொவைடர்கள் காட்டும் பாகுபாடுகள் களையப்படும் என்று அறிவித்திருக்கிறது.
அதாவது உங்களின் நெட்வொர்க் ப்ரொவைடர் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இணையத்தின் சேவையை தாமதமாக்கலாம், குறிப்பிட்ட தளத்தினை பார்ப்பதற்கு மறுப்பு தெரிவிக்கலாம். அந்த இணைய தளங்களைப் பார்ப்பதற்கு உங்களிடம் தனியாக கட்டணம் வசூலிக்கலாம். இதையெல்லாம் நீக்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் இணைய சமநிலை.
சமநிலையான இணைய பயன்பாடு என்பது, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தினை அதிகம் ஆதரிக்கும். அதன் விளைவாக மாற்றுக் கருத்துகள், சிந்தனைகள், ஒரு பிரச்சனையைப் பற்றிய அணுகுமுறைகள் என அனைத்தையும் நம்மால் அறிந்து கொள்ள இயலும்.
இண்டெர்நெட் சேவைகளை வழங்கும் சர்வீஸ் புரோவைடர்கள், எந்தெந்த இணைய தளங்களை மக்கள் பார்க்க வேண்டும் என்ற பாகுபாடுகளை உருவாக்கக் கூடாது என்று கூறியிருக்கிறது தொலைத் தொடர்பு ஆணையம்.
Net Neutrality: இணைய சமநிலைக் கொள்கை கடந்து வந்த பாதை:
ஏப்ரல் 2015 : முகநூல் பகக்த்தினை பயன்படுத்த புதிதாக விலை நிர்ணயம் செய்து, அதை மக்களுக்கு விலைக்கு விற்க முயன்றது முகநூல். அதே போல் ஏர்டெல் ஜீரோ என்ற புதிய திட்டம் ஒன்றையும் ஏர்டெல் அறிவித்தது. அதனை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள்.
ஜூலை 2015: இணைய வசதியினை பெறுவது மக்களின் அடிப்படை உரிமையாகும். மேலும் அவ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தொலைத்தொடர்பு துறை கூறி, நெட் நீயூட்ராலிட்டி கொள்கைகள் பயன்படுத்துதல் பற்றி யோசிக்க ஆரம்பித்தனர்.
பிப்ரவரி 2016: இணைய சேவை ஒழுங்கிற்காக புது கொள்கைகள் கொண்டுவரப்பட்டு, பாகுபாடுகள் நிறைந்த சேவையின் பயன்பாட்டினை தடை செய்தது ட்ராய்.
ஜனவரி 2017: இதைப்பற்றி மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தது ட்ராய் அமைப்பு.
நவம்பர் 2017: இணைய சமநிலைக் கொள்கைகள் பற்றி மத்திய அமைச்சகத்திடம் தகவல் தந்தது. அலைவரிசை மற்றும் டெலிகாம் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அனைத்துவிதமான டேட்டா பேக்குகளுக்கும் ஒரே மாதிரியான இணைய சேவையினை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. விலையை காரணமாக காட்டி இணைய சேவைகளின் வேகம் மற்றும் இணைய தள சேவையை முடக்குதல் ஆகியவை கூடாது என்று அறிவித்தது.