நெட்ஃபிலிக்ஸ் (Netflix) நிறுவனம் சர்வதேச அளவில் ஓடிடி துறையில் முன்னணி வகிக்கிறது. உலகெங்கும் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் முதல் முறையாக இந்தாண்டு நிறுவனம் சரிவை சந்தித்தது. தனது சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை குறைந்தது.
இதையடுத்து நெட்ஃபிலிக்ஸ் சந்தா கட்டணத்தை குறைத்தது. இந்நிலையில் புதிய திட்டமாக குறைந்த கட்டண சந்தா திட்டத்தில் விளம்பரங்கள் வரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் திட்டம் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்படுகிறது.
இந்தத் திட்டங்கள் முதலில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
முன்னதாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் வீடியோவிற்கு இடையில் விளம்பரம் வரும் வகையில் குறைந்த கட்டண சந்தா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் நெட்ஃபிலிக்ஸ் இணைய உள்ளது. இவ்வாறு செய்கையில் திட்டத்தின் கட்டணம் மேலும் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய சந்தாதாரர்களை ஈர்க்கவும் முடிவு செய்துள்ளது.
இதுதவிர மேலும் பல மாற்றங்களை நெட்ஃபிலிக்ஸ் கொண்டு வர உள்ளது. அதாவது Password-sharing-க்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஒருவர் கட்டணம் செலுத்தி நெட்ஃபிலிக்ஸ் சந்தா திட்டதை பெற்றால் குறிப்பிட்ட நபர்கள் ஒரு ஐடியைப் பயன்படுத்தி நெட்ஃபிலிக்ஸ் தொகுப்புகளை பார்க்கலாம். இதற்கு கட்டணம் செலுத்தியிருப்பவர் மற்றவருக்கு பாஸ்வேர்ட் சேர் செய்தால் போதுமானது. அந்தவகையில் தற்போது Password-sharing-க்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil