நெட்ஃபிளிக்ஸ் சர்வதேச அளவில் முன்னணி ஓடிடி நிறுவனமாகும். உலகெங்கும் பயனர்களை கொண்டுள்ளது. 1 மாதம், 3 மாதம், 6 மாதம் என பயனர்களுக்கு ஏற்ற வகையில் சந்தா திட்டங்கள் உள்ளன. அந்தவகையில் ஒரு அக்கவுண்ட் பயன்படுத்தி குறிப்பிட்ட நபர்கள் வரை பாஸ்வேர்டு சேர் செய்து (பாஸ்வேர்டு பகிர்ந்து) பயன்படுத்தலாம். இந்நிலையில், இந்த ஆப்ஷனை ரத்து செய்ய உள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் கடந்தாண்டு டிசம்பரில் அறிவித்தது.
அதன்படி புதிய தலைமை நிர்வாக அதிகாரிகளாக பதவியேற்ற டெட் சரண்டோஸ் மற்றும் கிரெக் பீட்டர்ஸ் ஆகியோர் இந்த அறிவிப்பை உறுதிபடுத்தியுள்ளனர். அவ்வாறு பாஸ்வேர்டு சேர் செய்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும், டிஸ்னி ஹாட்ஸ்டார் போல் விளம்பரத்துடன் கூடிய குறைந்த விலை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
நெட்ஃபிளிக்ஸ் பயனர்களை உயர்த்தும் நோக்கிலும், வருவாய் பற்றாக்குறையை போக்கவும் இந்த முடிவு எடுக்கப்படுவதாக கூறுகின்றனர். குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளை மையமாக வைத்து, நிறுவனத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கையை 15 முதல் 20 மில்லியன் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்டு சேரிங் ஆப்ஷனை ரத்து செய்வது சவாலான ஒன்று என்றும் கூறினர்.
விளம்பர அடிப்படையிலான திட்டம் தற்போது பல நாடுகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 6.99 டாலர் மதிப்பில் இந்த திட்டம் அமெரிக்கா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, பிரேசில், பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல், அர்ஜென்டினா, எல் சால்வடார், குவாத்தமாலா, ஹோண்டுராஸ் மற்றும் டொமினிகன் ஆகிய நாடுகளில் பாஸ்வேர்டு பகிர்வு ரத்து செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது என புதிய தலைமை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil