Infinix நிறுவனம் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான Hot 60i 5G-ஐ விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. கடந்த மாதம் வெளியான Hot60 5G போனின் அடுத்த மாடலாக இது வருகிறது. Infinix நிறுவனம் புதிய போன் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், அதன் சிப்செட், பேட்டரி திறன், வண்ண வகைகள் மற்றும் பல விவரங்கள் அடங்கும்.
Infinix நிறுவனம், Hot 60i5G போன் Flipkart, அதன் சொந்த இணையதளத்தில் விற்பனைக்கு வரும் என்று உறுதி செய்துள்ளது. இந்த போன் 4 வண்ண வகைகளில் கிடைக்கும். Shadow Blue, Monsoon Green, Sleek Black மற்றும் Plum Red. போனின் வடிவமைப்பைப் பொறுத்தவரை, இது iPhone 17 Air-ல் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் pill-shaped வடிவிலான கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கேமரா அமைப்புடன், போனின் பின்புறம் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டுள்ளது. போனின் அடிப்பகுதியில் Infinix லோகோ இடம்பெற்று உள்ளது. போனின் வெளியீட்டு தேதி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், இது இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Infinix Hot 60i-ன் சிறப்பம்சங்கள்
Infinix Hot 60i, MediaTek Dimensity 6400 செயலியைக் கொண்டிருக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே செயலிதான் realme P3x மற்றும் Lava Storm Lite போன்ற போன்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போனில் 6,000mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது அதன் பிரிவில் மிகப்பெரிய பேட்டரி என்று நிறுவனம் கூறுகிறது. இது IP64 சான்றிதழுடன் வருகிறது. இதனால், தண்ணீர் தெறிப்பு மற்றும் லேசான மழைத்துளிகளிலிருந்து பாதுகாக்கும், ஆனால் முழுமையாகநீரில் மூழ்கினால் சேதமடையலாம். இதன் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. இதில் முதன்மை கேமரா 50MP லென்ஸ் கொண்டது. LED ஃபிளாஷ், HDR மற்றும் பனோரமா மோட்களையும் இது ஆதரிக்கும். இந்த போன் Android 15 அடிப்படையாகக் கொண்ட Infinix-ன் XOS 15 மென்பொருளில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. AI Eraser, AI Extender, AI Call Translation மற்றும் Circle to Search போன்ற பல AI அம்சங்களும் இதில் இடம்பெறும் என்று Infinix உறுதியளித்துள்ளது.
விலை குறித்த தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை. எனினும், Hot 60i 5G-யின் விலை சுமார் ரூ.10,000-க்கு அருகில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இதைவிட அதிக விலையில் இருந்தால், அது Infinix-ன் சொந்த Note 50x போனுடன் போட்டி போடும் சூழல் ஏற்படும்.