110 சிசி ஃபேமிலி ஸ்கூட்டர் செக்மென்ட் பலருக்கு போரிங்காக இருக்கலாம். இந்த செக்மென்டை அதிகளவு ஆக்கிரமித்துள்ளது ஹோண்டா அக்டிவா தான். ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டியாக அதே டிசைனில் களமிறக்கப்பட்டது தான் டி.வி.எஸ் ஜூபிட்டர் 110. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து இதில் முழுவதும் காணலாம்.
முதலில் இது தொடர்பான அறிமுக வீடியோ வெளியிடப்பட்ட போது, டிசைனில் சொதப்பல் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால், ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்ட போது அந்த அச்சம் அகன்றது. குறிப்பாக, இந்த தலைமுறையினர் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் திருப்தி படுத்தும் அளவிற்கு இதன் டிசைன் அமைந்தது.
இதன் நீளமான முன்பக்க டிஆர்எல், எல்.இ.டி-யுடன் சிங்கிள் யூனிட்டாக உள்ளது. பின்புறமும் இதே டிசைனில் உள்ளது. டிவிஎஸ் ஜூபிட்டர் 110-ல் நீலம் நிற வேரியன்ட் காண்போர் கண்களைக் கவரும் வகையில் உள்ளது.
டி.வி.எஸ் ஜூபிட்டர் 125 சிசியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே சேசிஸ் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் டேங்க் இடமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சீட்டுக்கு அடியில் நிறைய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இரண்டு ஹாஃப் ஃபேஸ் ஹெல்மெட்டுகள் வைக்கும் அளவிற்கு தாராளமாக இடமளிக்கப்பட்டுள்ளது. எனினும், இ.சி.இ தரச்சான்று பெற்ற ஹெல்மெட்டுகளை இதில் வைக்க இயலாது.
முன்புறம் கால்கள் வைத்திருக்கும் இடத்தில் ஷாப்பிங் பேக் வைக்கும் அளவிற்கு இடம் உள்ளது. மேலும், பையை மாட்டுவதற்கான கொக்கியும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது குடும்பஸ்தர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
ஓட்டுவதற்கு மிக இலகுவாக இருக்கும் வகையில் இதன் திறன் உள்ளது. பின்னால் அமர்ந்திருக்கும் நபர் இரண்டு பைகளை வைத்திருந்தாலும், வண்டியை ஓட்டுவதற்கு எந்த சிரமமும் இல்லை. மேலும், பின்னால் இருக்கும் நபரும் வசதியாக அமரும் வகையில் இதன் டிசைன் உள்ளது. இதன் சஸ்பென்ஷன் சற்று கடினமாக உணரப்பட்டாலும், சாலையில் உள்ள மேடு பள்ளங்களை எளிதாக கடந்து செல்ல உதவுகிறது.
கம்யூட்டர் ஸ்கூட்டர்களுக்கு ஏற்றவாறு இதன் ஏர் கூல்டு எஞ்சின் யூனிட் அதன் பணியை சிறப்பாக செய்கிறது. ஐகோ அசிஸ்ட்டும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிஸியான நகர்ப்புற பகுதிகளில் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கிறது.
ஹோண்டா அக்டிவா-உடன் ஒப்பிடும் போது, இதன் பவர் 7.9 பிஹெச்பி, டார்க் 9.8 என்.எம் உள்ளது. ஃபேமிலி மேன்களை குறிவைத்து களமிறங்கியிருக்கும் இந்த புதிய டி.வி.எஸ் ஜூபிட்டர் 110-ஐ நீங்கள் நிச்சயம் பரிசீலிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“