New voter ID card | இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தேர்தல்களில் வாக்களிக்க தகுதி பெறுவார். ஜனநாயக முறையில் விரும்பிய நபர்களுக்கு வாக்களிக்க உரிமை உள்ளது. இதற்கு தேர்தல் ஆணையத்தால் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அந்தவகையில் தற்போது மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய அடையாள அட்டை தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் பழைய அட்டை வைத்திருப்பவர்கள் புகைப்படம் உள்ளிட்டவற்றை மாற்றி புதிய அட்டை பெறலாம் என சாகு தெரிவித்தார்.
இந்த புதிய வாக்காளர் அட்டையில் க்யூஆர் கோடு வசதியுடன் சிறிய அளவில் எழுத்துக்கள் இடம்பெறும் வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அடையாள அட்டை வெளியிடப்பட உள்ளது. இதுவரை வாக்காளர் அட்டைக்கு பின்புறம் ஒட்டப்பட்ட 'ஹாலோகிராம்' ஸ்டிக்கர் இனி அட்டைக்குள்ளையே ஒட்டப்படும். அடையாள அட்டை முன்புறம், வாக்காளரின் புகைப்படமும், அவரது 'நெகட்டிவ் இமேஜ்' போன்ற படமும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வாக்காளர் அட்டைக்கான காரணம்?
போலி வாக்காளர் அட்டைகள் உருவாக்க முடியாத வகையில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/