செல்போன் இறக்குமதி வரி 20%-ஆக உயர்வு: செல்போன் விலை அதிகரிக்க வாய்ப்பு

இறக்குமதி செய்யப்படும் செல்போன்கள் மற்றும் செல்போன்களின் உதிரி பாகங்கள் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலை உயரும் வாய்ப்பு உள்ளது.

மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்த 2018-19-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், இறக்குமதி செய்யப்படும் செல்போன்கள் மற்றும் செல்போன்களின் உதிரி பாகங்கள் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலை உயரும் வாய்ப்பு உள்ளது.

2018-19-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். அதில், செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டது. உதிரி பாகங்களின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதன் மூலம், செல்போன்களை சரிசெய்ய ஆகும் செலவும் அதிகரிக்க வாய்ப்புண்டு.

இந்தியாவில் செல்போன் உற்பத்தியை அதிகரிக்கவும், அதன்மூலம் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அருண் ஜெட்லி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். மேலும், பல்வேறு நாடுகளுக்கிடையே வணிகத்தை எளிதாக்கும் விதமாக, சுங்க வரி சட்டத்தில் மாற்றம் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் செல்போன்களை பல நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. ஆனாலும், டிஸ்பிளே, ப்ராசஸர் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. செல்போன் மற்றும் அதன் உதிரிபாகங்கள் தயாரிப்பில் உலகளவில் சீனா முதலிடம் வகிக்கிறது. அவ்வாறு சீனாவில் தயாரிக்கப்படும் சயோமி, ஜூவாவே, ஓப்போ, விவோ ஆகிய மொபைல்கள் இந்தியாவில் விற்பனையில் முக்கிய இடத்தை தக்க வைத்துள்ளன.

செல்போன்கள் தவிர்த்து தொலைக்காட்சி பெட்டிகளுக்கான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

×Close
×Close