/indian-express-tamil/media/media_files/2025/09/21/jiopc-cloud-2025-09-21-21-51-06.jpg)
வெறும் ரூ.599-க்கு உங்க டிவி-யை கம்ப்யூட்டாராக மாற்றலாம்... ஜியோவின் கிளவுட் PC சேவை!
உங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் இல்லையா? பரவாயில்லை, உங்களிடம் ஒரு டிவி இருந்தால் போதும், அதையே ஒரு கம்ப்யூட்டராக மாற்றிவிடலாம். எப்படி என்கிறீர்களா? இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, சமீபத்தில் அறிமுகப்படுத்திய 'JioPC Cloud' சேவை மூலம் சாத்தியமாகியுள்ளது.
JioPC Cloud என்றால் என்ன?
ஜியோவின் கிளவுட் அடிப்படையிலான விர்ச்சுவல் டெஸ்க்டாப் சேவையாகும். அதாவது, உங்கள் டேட்டாவும் புரோகிராம்களும் கிளவுடில் சேமிக்கப்பட்டு, இன்டர்நெட் மூலம் உங்கள் டிவி-க்கு நேரடியாக ஸ்ட்ரீம் செய்யப்படும். இதனால், உங்கள் டிவி, கம்ப்யூட்டர் போலவே இயங்கும். ஜியோவின் AirFiber அல்லது Fiber இணைப்புடன் இணைந்து, ஜியோ செட்-டாப் பாக்ஸ் (STB), ஒரு கீபோர்டு மற்றும் மவுஸ் இருந்தால் போதும், உங்கள் டிவியே தனிப்பட்ட கணினியாக மாறிவிடும்.
யார் இதனைப் பயன்படுத்தலாம்?
மாணவர்கள்: ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளவும், கல்வி சார்ந்த கருவிகளைப் பயன்படுத்தவும்.
தொலைதூரத்தில் பணிபுரிபவர்கள்: வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளைச் செய்யவும்.
மலிவு விலையில் PC தேடுபவர்கள்: அதிக செலவில்லாமல் ஒரு கம்ப்யூட்டர் அனுபவத்தைப் பெற விரும்புவோருக்கு இது மிகச்சிறந்த வழி.
அம்சங்கள் என்னென்ன?
ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, JioPC மென்மையான மற்றும் தடையற்ற அனுபவத்தை வழங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. இதில், இன்டர்நெட் பிரவுசிங், ஆப்ஸ்களைப் பயன்படுத்துவது, மற்றும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது என அனைத்தையும் எளிதாகச் செய்ய முடியும்.
சாப்ட்வேர்: 8GB ரேம் மற்றும் 4 vCPUs@2.45 GHz.
சேமிப்பகம்: 100GB கிளவுட் ஸ்டோரேஜ்.
ஆப்பரேட்டிங் சிஸ்டம்: உபுண்டு (Ubuntu) லினக்ஸ்.
எப்படிப் பயன்படுத்துவது?
உங்களுக்கு JioFiber அல்லது AirFiber இணைப்புடன் ஒரு ஜியோ செட்-டாப் பாக்ஸ் தேவை. உங்கள் டிவி-யில் உள்ள செட்-டாப் பாக்ஸின் ஆப்ஸ் மெனுவிலிருந்து JioPC ஆப்ஸை தேர்ந்தெடுக்கவும். USB அல்லது ப்ளூடூத் மூலம் கீபோர்டு மற்றும் மவுஸை செட்-டாப் பாக்ஸுடன் இணைக்கவும். பிறகு, JioPC கணக்கைத் தொடங்கி, உங்கள் விர்ச்சுவல் டெஸ்க்டாப்பை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
சந்தா விவரங்கள்
ஜியோ நிறுவனம் ஒரு மாத JioPC சந்தாவை இலவசமாக வழங்குகிறது. அதன் பிறகு, ஒரு மாத சந்தாவிற்கு ரூ.599 + ஜி.எஸ்.டி. கட்டணம் செலுத்த வேண்டும். இது தவிர, ரூ.999, ரூ.1499, ரூ.2499, ரூ.4599 போன்ற பல்வேறு பிளான்களும் உள்ளன. இது ஒரு சிறந்த தொழில்நுட்பப் புரட்சி, உங்கள் டிவி-யை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராக இருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.