ஃபேஸ்புக் பயன்படுத்தும் 12 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் பயன்படுத்தும் 12 கோடி பயனாளர்களின் தகவல்கள், அவர்களது தனிப்பட்ட சாட்கள் திருடப்பட்டு அவை அனைத்தும் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டுள்ளதாக பிபிசி ரஷியன் சர்வீஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டது மட்டுமில்லாமல், அவர்களின் அந்தரங்க மெசேஜ்களையும் ஹேக்கர்கள் திருடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அந்த மெசேஜ்களை, ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட்டிற்கு 0.10 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 7.28 பைசா எனும் கட்டணத்திற்கு விற்பனை செய்யப் போவதாக ஹேக்கர்கள் அச்சுறுத்தி இருப்பதோடு, அவற்றில் சில அக்கவுண்ட்களை வலைதளத்தில் விற்பனைக்கு பட்டியலிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிபிசிக்கு பதிலளித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், அவர்களது பாதுகாப்பில் எந்த காம்ப்ரமைஸும் இல்லை என்றும், சில பிரவுசர்கள் மூலம், ஹேக்கர்கள் தகவல்களை திருடி இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து பயனாளர்களின் அக்கவுண்ட்களையும் பாதுகாக்கும் முயற்சியில் தங்கள் நிறுவனம் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இம்முறை நடந்திருக்கும் தகவல் திருட்டில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த பயனர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. சில அக்கவுண்ட்கள் லண்டன், அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளை சேர்ந்தவை என கூறப்படுகிறது.
இந்த ஹேக்கர்கள் வலைதளம் ஒன்றில் வெளியிட்ட விளம்பரங்களில், பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ்கள் ஒரு அக்கவுண்ட்டுக்கு 0.10 டாலர்கள் கட்டணத்திற்கு விற்பனைக்கு பட்டியலிடப்பட்டது. தாங்கள் தான் ஹேக்கர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், 81,000 யூசர்களின் விவரங்களை அவர்கள் பட்டியலிட்டனர். இதில், இரண்டு காதலர்களின் சாட்களும் வெளியிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தற்சமயம் அந்த விவரங்கள் நீக்கப்பட்டுவிட்டது.
இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவன அதிகாரி கை ரோசென் கூறுகையில், "பிரவுசர் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளவர்களை தொடர்பு கொண்டு மால்வேர் எக்ஸ்டென்ஷன்களை எங்கள் ஸ்டோர்களில் இருந்து எடுத்து விடுமாறு அறிவுறுத்தி இருக்கிறோம். மேலும் உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஃபேஸ்புக் பயனர் விவரங்களை பட்டியலிட்ட வலைதளத்தை பிளாக் செய்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் மூன்று கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 12 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டது அல்லாமல், அவர்களது பெர்சனல் மெசேஜ்கள் ஏலத்தில் விடப்பட இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.