ஓலா எலெக்ட்ரிக் அறிவித்துள்ள புதிய எலெக்ட்ரிக் கார் சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் தொலைவு செல்லும் என்றும் அந்த கார் 4 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை தொடும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த புதிய கார் 2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் (Ola Electric) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மின்சார காரை அறிவித்துள்ளது. ஆனால், அந்த வாகனத்தைப் பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாது. இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு நிறுவனத்தின் லைவ் ஸ்ட்ரீமின் போது, அந்த நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய காரை அறிமுகப்படுத்த உள்ளது என்றும் அந்த கார் இந்தியாவில் தயாரிக்கப்படும் வேகமான கார் என்றும் அறிவித்தார். இந்த கார் 2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
“புதிய இந்தியாவை வரையறுக்கும் ஒரு கார் எங்களிடம் உள்ளது. அச்சமில்லாமல் தன் தலைவிதியை தானே எழுதும் நம்பிக்கை கொண்ட இந்தியா. எங்கள் கார் இந்தியாவின் வேகமான கார்களில் ஒன்றாக இருக்கும். 4 வினாடிகளுக்குள் 0 முதல் 100 வரை வேகத்தை எட்டும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் செல்லும். இது இந்தியாவில் இதுவரை உருவாக்கப்பட்ட வேகமான காராக இருக்கும். முழு கண்ணாடி கூரையுடன், இது மூவ் ஓஎஸ் மற்றும் உலகின் மற்ற கார்களைப் போலவே சிறந்த ஓட்டுநர் திறன்களைக் கொண்டிருக்கும். இந்த கார் சாவி மற்றும் கைப்பிடி இல்லாததாக இருக்கும்” என்று அகர்வால்,கார் அறிவித்த நேரலையில் கூறினார்.
இந்த வாகனத்தைப் பற்றி அதிகம் தெரியப்படுத்தப்படவில்லை என்றாலும், இரண்டு முக்கிய விஷயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன: 500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் செல்லும். கார் 4 வினாடிகளில் நூறு கிலோமீட்டர் வேகத்தை எட்டும். இதைப் பொருத்தவரை, டாடாவின் நெக்ஸான் EV 437 கிலோமீட்டர் தூரம் செல்லும் என்று கூறுகிறது. டாடாவின் மின்சார வாகனம் சுமார் 9.4 வினாடிகளில் மணிக்கு பூஜ்ஜியத்திலிருந்து நூறு கிலோமீட்டர் வேகத்தை எட்டும்.
ஓலா எலெக்ட்ரிக்கின் இன் புதிய கார் ஈர்க்கக்கூடியதாக இருந்தாலும், டாடா நெக்சான் ஒரு சிறிய எஸ்.யு.வி மற்றும் அதன் புதிய காரின் வடிவத்தை ஓலா இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ஆண்டு ஜூலை மாதம் அகர்வால் பகிர்ந்த டீஸர் படம் ஒரு ஹேட்ச்பேக்கை சித்தரித்தது. ஆனால், ஓலா எலக்ட்ரிக் வீடியோவில் சித்தரிக்கப்பட்டுள்ள காரின் நிழல் ஃபாஸ்ட்பேக் கூரையுடன் கூடிய செடான் போல் தெரிகிறது. மேலும், இந்த புள்ளிவிவரங்கள் 2024 ஆம் ஆண்டிற்குள் மற்ற இந்திய மின்சார வாகனங்களுக்கு இணையாக இருக்கும்.
இது தவிர, இந்த காரில் முழுவதும் கண்ணாடி கூரை, சாவி இல்லாத கதவு மற்றும் கைப்பிடியில்லாத வடிவமைப்பு ஆகியவை இடம்பெறும் என்று அகர்வால் மேலும் கூறினார். கைப்பிடியில்லாத வடிவமைப்பு என்பதன் அர்த்தம் என்ன என்பதை நாம் இன்னும் உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், டெஸ்லா மாடல் எஸ் உட்பட பல நவீன கார்களில் பிரபலமாகியுள்ள மாடலைப் போல இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய கார் தமிழகத்தில் உள்ள ஓலாவின் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். இது புதிய உற்பத்தி திறன்களுக்கு இடமளிக்கும் வகையில் விரிவாக்கப்படும். கார் மற்றும் ஸ்கூட்டருடன், சொந்தமாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மின்கலங்களையும் அதே வசதியில் தயாரிக்க இருப்பதாக ஓலா கூறுகிறது. இந்நிறுவனம் அதன் அடிப்படை மாடல் S1 ஸ்கூட்டரை லைவ்ஸ்ட்ரீமின் போது மீண்டும் அறிமுகப்படுத்தியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.