இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஒன்பிளஸ் 13எஸ், ஜூன் 5 இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் சிறிய ரக Compact போனாக களமிறங்கியிருப்பது, தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கச்சிதமான வடிவமைப்பில், சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டுவந்துள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் குறித்த விரிவான அலசலை பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
ஒன்பிளஸ் 13எஸ், தனது வழக்கமான பெரிய திரைகளுக்கு பதிலாக, 6.32 இன்ச் 1.5K 8T LTPO AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த திரை 120Hz ரெப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் உச்சபட்ச பிரகாசத்துடன், தெளிவான வண்ணங்களை வழங்குகிறது. இதன் மூலம், வீடியோக்களைப் பார்ப்பதும், கேம்ஸ் விளையாடுவதற்கும் புதிய அனுபவமாக இருக்கும்.
மேலும், இந்த மாடலில் முக்கிய வடிவமைப்பு மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஒன்பிளஸின் அடையாளமாக இருந்த "அலர்ட் ஸ்லைடர்" நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக "பிளஸ் கீ" (Plus Key) என்ற புதிய பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பட்டனை கேமரா, ஒலி அமைப்புகள் அல்லது உங்களுக்கு விருப்பமான பிற செயலிகளை விரைவாக அணுகுவதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். சுமார் 185 கிராம் எடையுடன், இந்த போன் கைகளில் கச்சிதமாக இருக்கிறது. IP65 தரச் சான்றிதழுடன் வருவதால், தூசி மற்றும் நீர் தெறிப்புகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கும்.
குவால்காம் நிறுவனத்தின் அதி சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அன்றாட பயன்பாடுகள் முதல் அதிதீவிர கேமிங் வரை அனைத்தையும் மிக எளிதாகவும், தடையின்றியும் கையாள முடியும். இதற்குத் துணையாக 12GB LPDDR5x ரேம் மற்றும் 256GB அல்லது 512GB UFS 4.0 சேமிப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது, இது தகவல்களை விரைவாகப் படிக்கவும், எழுதவும் உதவுகிறது. போன் சூடாவதைத் தடுக்க, 4400mm² அளவிலான கிரையோ-வெலாசிட்டி வேப்பர் சேம்பர் குளிரூட்டும் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பின்பக்கத்தில், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) வசதி கொண்ட 50MP பிரதான சென்சார் மற்றும் 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் அடங்கிய இரட்டை கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், தெளிவான புகைப்படங்களையும், தொலைவில் உள்ள காட்சிகளையும் துல்லியமாகப் படம் பிடிக்க முடியும். முன்புறத்தில், 32MP ஆட்டோ-ஃபோகஸ் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இது துல்லியமான செல்ஃபிக்களையும், தரமான வீடியோ கால்களையும் செய்ய முடியும்.
ஒன்பிளஸ் 13எஸ் மாடலில் 5850mAh முதல் 6260mAh வரையிலான திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை சார்ஜ் செய்ய, 80W SuperVOOC அதிவேக சார்ஜிங் வசதி உள்ளது. இதன் மூலம், சில நிமிடங்களிலேயே நாள் முழுவதற்குமான சார்ஜை ஏற்றிவிட முடியும். ஒன்பிளஸ் 13 எஸ், ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 15 (OxygenOS 15) இயங்குதளத்துடன் வருகிறது. இது பயனர்களுக்கு எளிமையான மற்றும் தடையற்ற அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒன்பிளஸ் AI அம்சங்களான AI கால் அசிஸ்டன்ட், ஜெமினியின் லைவ் கேமரா மற்றும் ஸ்கிரீன் ஷேரிங் உரையாடல்கள் போன்ற நவீன வசதிகளும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில், ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 256GB சேமிப்பு வசதி கொண்ட மாடலின் விலை ரூ. 54,999 ஆகவும், 12GB ரேம் + 512GB சேமிப்பு கொண்ட மாடலின் விலை ரூ. 59,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளாக் வெல்வெட், பிங்க் சாடின் மற்றும் கிரீன் சில்க் ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கும். ஜூன் 12, 2025 முதல் அமேசான், ஒன்பிளஸ் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனைக்கு வரும். முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5,000 உடனடி தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.