/indian-express-tamil/media/media_files/2025/07/16/oneplus-2-in-1-charging-cable-2025-07-16-20-07-55.jpg)
ஒரே நேரத்தில் போன், ஸ்மார்ட்வாட்ச் இரண்டும் சார்ஜ்... ஒன்பிளஸ் 2-இன்-1 சூப்பர் வூக் கேபிள் அறிமுகம்!
ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யப் பலரும் எதிர்கொள்ளும் சவாலுக்கு ஒன்பிளஸ் புதிய தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை, பயனர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட அடாப்டர்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது (அ) வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்டுகளை நாட வேண்டியிருந்தது. ஆனால் இனி அந்தக் கவலை இல்லை.
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 2-இன்-1 சூப்பர் வூக் கேபிள் (OnePlus 2-in-1 SUPERVOOC Cable) என்ற புதிய சார்ஜிங் கேபிளை வெளியிட்டுள்ளது. இந்தக் கேபிள் உங்கள் ஒன்பிளஸ் போன் மற்றும் ஒன்பிளஸ் வாட்ச் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் சார்ஜ் செய்ய உதவுகிறது.
இந்த கேபிளின் விலை அமெரிக்காவில் $29.99 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.2,577) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாடிக்கையாளர்கள் இதை இப்போதே ஆர்டர் செய்யலாம். ஜூலை 24, 2025 முதல் ஆர்டர்களுக்கும், ஜூலை 25, 2025 முதல் வழக்கமான ஆர்டர்களுக்கும் விநியோகம் தொடங்கும். இந்தியாவில் இதன் கிடைக்கும் தன்மை, விலை குறித்த தகவல்களை ஒன்பிளஸ் இன்னும் வெளியிடவில்லை.
சிறப்பம்சங்கள்
ஒன்பிளஸ் வாட்ச் மற்றும் அதன் அடுத்த தலைமுறை வாட்ச்களை சார்ஜ் செய்ய, கேபிளின் நடுவில் போகோ பின் சார்ஜிங் கனெக்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பயணத்தின்போது பல கேபிள்களைச் சுமந்து செல்ல வேண்டியதில்லை. இது ஒன்பிளஸின் அடையாளமான சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில், 120 செ.மீ நீளத்தில் வருகிறது. இந்தக் கேபிள் 8 ஆம்ஸ் (8A) வரை மின்னோட்டத்தைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. ஸ்மார்ட்போனை மட்டும் சார்ஜ் செய்யும்போது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வரை ஆதரிக்கும். ஸ்மார்ட்வாட்ச், போன் இரண்டையும் ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யும்போது, போனுக்கு 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கையும், ஒன்பிளஸ் வாட்சுக்கு 10W சார்ஜிங்கையும் வழங்கும். இதில் உள்ள E-marker "ஸ்மார்ட் சிப்" அதிகப்படியான சார்ஜிங் (overloading) ஏற்படாமல் பாதுகாக்கிறது.
இந்த ஒன்பிளஸ் 2-இன்-1 சூப்பர் வூக் கேபிள், ஒரே கேபிள் மூலம் பல சாதனங்களை சார்ஜ் செய்ய விரும்புபவர்களுக்கு ஒரு வசதியான மற்றும் திறமையான தீர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.