ஆன்லைன் அபாயம்: ஷாருக், அனுஷ்கா, சச்சின் ரசிகர்களே… உஷார்!

எந்த பிரபலங்கள் மிகவும் “ஆபத்தான” முடிவுகளை உருவாக்குகிறார்கள் என்பதை அறியப் பிரபலமான நபர்களை மெக்கஃபி ஆராய்ச்சி செய்தது. அந்த வரிசையில், அதிகமான தீங்கு விளைவிக்கும் தேடல் சொற்களுடன் வலுவாகத் தொடர்புடையவர், ரொனால்டோ.

By: October 20, 2020, 6:34:53 PM

Online Safety, McAfee Malware updates Tamil News: இந்தக் காலத்தில் ஓர் பிரபலத்தைப் பற்றிய செய்திகளை ஆன்லைனில் விரைவாகத் தேடுவது பொதுவான நிகழ்வு. அவர்களைப் பற்றிய சமீபத்திய செய்திகளை அறிய விரும்பினால், சர்ச் பாக்ஸில் அவர்களின் பெயரைத் தட்டச்சு செய்து என்டர் தட்டுவதற்கு நாம் தயங்குவதில்லை. ஆனால், இதுபோன்ற தேடல் பயனரின் தரவை ஆபத்தில் கொண்டுபோய் சேர்க்கும் என்பது பலருக்குத் தெரியாதது.

அமெரிக்க உலகளாவிய கணினி பாதுகாப்பு மென்பொருள் நிறுவனமான மெக்கஃபி (McAfee), பல்வேறு தீங்கு விளைவிக்கும் தளங்கள் மற்றும் அவர்களின் பெயர்களுடன் இணைக்கப்பட்ட வைரஸ்கள் காரணமாக ஆன்லைனில் ஆபத்தான தேடல் முடிவுகளை உருவாக்கும் முதல் 10 பிரபலங்களை அடையாளம் கண்டது. உலகளாவிய கால்பந்து வீரரான கிரிஸ்டியானோ ரொனால்டோ, இந்தியாவில் 2020-ம் ஆண்டின் மெக்கஃபியின் மிகவும் ஆபத்தான பிரபலங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஷாருக் கான், அனுஷ்கா ஷர்மா, சாரா அலி கான், சோனாக்ஷி சின்ஹா, டாப்ஸி பன்னு மற்றும் அர்ஜித் சிங் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.

2020-ம் ஆண்டில், லாக்டவுன் விளைவாக, மக்கள் ஆன்லைனில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தனர். இது பல சாதனங்களின் பயன்பாட்டை அதிகரித்தது. இலவச திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முதல் சமீபத்திய பிரபலமான செய்திகள் மற்றும் வதந்திகள் வரை, வாடிக்கையாளர்கள் தங்களின் நேரத்தை செலவிட டிஜிட்டலை நோக்கி நகர்கிறார்கள். ஹேக்கர்கள் இந்த வாய்ப்பை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு, தங்கள் மோசடி உத்திகளைச் செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர். இந்த தேடல் முடிவுகள் நுகர்வோரை, அவர்களே அறியாமல் அவர்களுடைய சாதனங்களில் தீம்பொருளை நிறுவத் தூண்டுகின்றன.

“சைபர் குற்றவாளிகள் பிரபல கலாச்சாரத்தின் மீதான நுகர்வோரின் ஆர்வத்தை தங்கள் சாதனங்களில் தீம்பொருளை நிறுவும், தீங்கு விளைவிக்கும் வலைத்தளங்களுக்கு நகர்த்துவதற்கும், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் உள்நுழைவு விவரங்களைத் தவறான கைகளில் சேர்ப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்” என்று மெக்கஃபி நிறுவனத்தின் துணைத் தலைவர் பேக்கர் நந்துரு கூறினார். “வாடிக்கையாளர்கள் முன்பைவிட இப்போது இலவச ஆன்லைன் பொழுதுபோக்குக்காக வலைத்தளங்களில் பலவற்றைத் தேடுகிறார்கள். மேலும் சைபர் குற்றவாளிகள் இலவச உள்ளடக்கத்தை வழங்குவதாகக் கூறும் போலி தளங்கள் போன்ற ஏமாற்றும் நடைமுறைகளைத் தொடர்ந்து செயல்படுத்துவதால், ரசிகர்கள் தங்கள் டிஜிட்டல் வாழ்க்கையைப் பாதுகாப்பதில் விழிப்புடன் இருப்பதும், எதையும் ‘க்ளிக்’ செய்வதற்கு முன் இரண்டு முறை சிந்திப்பதும் முக்கியம்” என்று அவர் கூறினார்.

எந்த பிரபலங்கள் மிகவும் “ஆபத்தான” முடிவுகளை உருவாக்குகிறார்கள் என்பதை அறியப் பிரபலமான நபர்களை மெக்கஃபி ஆராய்ச்சி செய்தது. அந்த வரிசையில், அதிகமான தீங்கு விளைவிக்கும் தேடல் சொற்களுடன் வலுவாகத் தொடர்புடையவர், ரொனால்டோ. அவருடைய ரசிகர்கள் அவரது வாழ்க்கை குறித்த தகவல்களையும் செய்திகளையும் தொடர்ந்து தேடுவதோடு, சமீபத்திய கால்பந்து ஒப்பந்தங்கள் குறித்த செய்திகளையும் தேடுகிறார்கள். அதோடு, பல பயனர்கள் சந்தா கட்டணத்தைச் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காகச் சட்டவிரோத ஸ்ட்ரீமிங் தளங்கள் மூலம் நேரடி கால்பந்து போட்டிகளையும் ஸ்ட்ரீமிங் செய்கிறார்கள். அத்தகைய பயனர் தீங்கு விளைவிக்கும் இணைப்பைக் க்ளிக் செய்தால், அவர்களின் சாதனம் திடீரென ஆட்வேர் (adware) அல்லது மால்வேரால் (malware) பாதிக்கப்படக்கூடும். மேலும், அவற்றின் தரவு ஹேக்கர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதற்கான  ஆபத்து நிலையில் இருக்கும்.

இலவச உள்ளடக்கமாகத் தெரிவதைத் தேடுவது உங்களை ஆழ்ந்த மோசடிக்கு இட்டுச் செல்லும். அடையாள திருட்டு, வங்கி, கிரெடிட் கார்டு மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகள், ஸ்கிம்மிங் தீம்பொருளை நிறுவுதல், கண்காணிப்பு மென்பொருள், ransomware, ட்ரோஜன்கள் மற்றும் வைரஸ்கள் ஆகியவை மிகவும் பொதுவான அபாயங்கள்.

2019-ம் ஆண்டில், மிகவும் ஆபத்தானவை என்று கருதப்பட்ட பிரபலங்களின் பெயர்களின் பட்டியலை வெளியிட்டது மெக்கஃபி. சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, பி.வி.சிந்து மற்றும் ராதிகா ஆப்தே உள்ளிட்ட பெயர்கள் அதிலிருந்தன.

எந்தவொரு தீம்பொருள் அல்லது அபாயங்களிலிருந்தும் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பது சாத்தியமற்றது என்றாலும், பயனர்கள் நிச்சயமாக எச்சரிக்கையாக இருக்க முடியும். தங்களுக்குப் பிடித்த பிரபலங்களைப் பற்றிய தகவல்களைத் தேடும்போது, அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் பதிவிறக்கங்களுக்கான நம்பகமான இணைப்புகளை மட்டுமே க்ளிக் செய்ய வேண்டும். மூன்றாம் தரப்பு வலைத்தளங்களைப் பார்வையிடுவதற்குப் பதிலாக அதிகாரப்பூர்வ தளங்களில் அதிகாரப்பூர்வ வெளியீடுகளுக்காகக் காத்திருப்பது மிகவும் பாதுகாப்பானது.

மேலும், ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கிற்கு வரும்போது, சட்டவிரோத ஸ்ட்ரீமிங் தளங்களைப் பயன்படுத்துவது சாதனத்தின் அழிவை ஏற்படுத்தும். பல சட்டவிரோத ஸ்ட்ரீமிங் தளங்கள் வீடியோ ஃபைல்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் இணைப்புகள் போன்ற மாறுவேடங்களில் தீம்பொருளைக் கொண்டுள்ளன. உங்களின் தரவு மற்றும் அமைப்பைப் பாதுகாக்க அனைவரும் இவற்றைத் தவிர்க்க வேண்டும். நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம், பயன்படுத்தப்படும் சாதனத்தில் நன்கு நிறுவப்பட்ட பாதுகாப்பு அமைப்பைக் கொண்டிருப்பது.

மக்கள் மெதுவாக டிஜிட்டல் உலகிற்கு மாறி ஆன்லைனில் அதிக நேரம் செலவழிக்கும்போது, அவர்கள் தொடர்ந்து சைபர் குற்றவாளிகளின் இலக்குகளாகவே இருப்பார்கள். தேவையான அனைத்து தகவல்களையும் நன்முறையில் கொண்டிருப்பதுதான் இதற்கான ஒரே தீர்வு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Celebrity search can cause serious online problems mcafee security issues tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X