Voter ID tamil news: தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்காளர்கள் தங்களுடைய பெயர்கள் வாக்காளர் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிவது மிகவும் அவசியமானது. இதனை அறிவதற்கு இந்திய தேர்தல் ஆணையம், அதன் இணையப்பக்கத்தில் வசதிகளை செய்துள்ளது.
இணையத்தில் உங்கள் வாக்காளர் அட்டையை எவ்வாறு செக் செய்து கொள்வது என்பதை பற்றி இங்கு காணலாம்.
முதலில் தேசிய வாக்காளர் சேவை போர்டல் http://Www.nvsp.in என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும். அதன் மேல் இடது மூலையில், ‘வாக்காளர் பட்டியலில் தேடு’ என்ற விருப்பத்தைக் காண்பீர்கள். இப்போது அதில் கிளிக் செய்யும்போது, நீங்கள் இந்த (https://electoralsearch.in/) பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
இங்கு எபிக் எண் (EPIC) மூலம் தேடலைத் தேர்வு செய்யலாம். எபிக் எண் (EPIC) என்பது வாக்காளர்களின் அடையாள அட்டையில் உள்ள எண்ணை குறிக்கிறது. இந்த எபிக் எண் மூலம் தேட, உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் வழங்கப்பட்ட எண்ணெழுத்து எண்ணை நீங்கள் அதில் வழங்க வேண்டும்.
மாறாக உங்களுடைய சுய விவரங்கள் மூலம் தேட நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் பெயர், வயது, பாலினம், மாநிலம், பிறந்த தேதி, மாவட்டம், தந்தை அல்லது கணவரின் பெயர் போன்ற விவரங்களை நீங்கள் அதில் வழங்க வேண்டும்.
தேவையான விவரங்களை பூர்த்தி செய்து கேப்ட்சா குறியீட்டை வழங்கவும். அதன் பின்னர் தேடல் பொத்தானை அழுத்தவும்.இப்போது போர்ட்டலில் உங்கள் பெயர் தோன்றினால், உங்கள் பகுதியில் வாக்களிக்க நீங்கள் தகுதியுடையவர் என்று அர்த்தம்.
உங்களுடைய இந்த தேடலில், அடிப்படை விவரங்களை உள்ளிட்டு தேசிய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைத் தேடலாம். அதில் வழங்கப்பட்டுள்ள வரைபடத்தில் வாக்குச் சாவடியைக் கண்டுபிடித்து, வாக்காளர் தகவல் சீட்டை அச்சிடலாம்.
இதில் வாக்காளர் பட்டியலில் பதிவு, மாற்றம், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றத்திற்கும் நீங்கள் விண்ணப்பிக்கலாம். அதோடு உங்கள் பூத் நிலைய அதிகாரி (பி.எல்.ஓ), வாக்காளர் பட்டியல் அதிகாரி (ஈரோ) மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளையும் தெரிந்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil