ஸ்மார்ட்ஃபோன்கள் நம் வாழ்வின் மிக முக்கிய அங்கமாக திகழ்ந்து வருகின்றன. தனிப்பட்ட வாழ்க்கை துவங்கி வேலை நிமித்தமாக பல உரையாடல்கள் என நாம் மிகவும் சார்ந்துள்ளோம். ஆனால், பல மணி நேரங்கள் அவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் மொபைல் பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடுகிறது. போன் பேட்டரி ஏன் இவ்வளவு சீக்கிரம் குறைகிறது? என்று யோசிக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள்! உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளை அதிகரிக்கவும், ஒருநாள் முழுவதும் நீடிக்கவும் உதவும் சில எளிய மற்றும் பயனுள்ள ரகசியங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
உங்கள் மொபைல் பேட்டரியை அதிகம் உறிஞ்சுவது எது தெரியுமா? உங்கள் ஸ்கிரீன்(திரை)தான். திரையின் வெளிச்சத்தை முடிந்தவரை குறைவாக வைத்துக் கொள்ளுங்கள். ஆட்டோ-பிரைட்னெஸ் (Auto-Brightness) அம்சத்தைப் பயன்படுத்துவது வெளிச்சத்தை தானாகச் சரிசெய்து பேட்டரியைச் சேமிக்கும். உங்கள் போன் பயன்பாட்டில் இல்லாதபோது திரை அணைந்துபோகும் நேரத்தை 30 வினாடிகள் அல்லது ஒரு நிமிடம் எனச் சுருக்கிக் கொள்ளுங்கள். Always-On Display வேண்டாம் சில போன்களில் இருக்கும் இந்த அம்சம் வசதியாக இருந்தாலும், இது தொடர்ந்து பேட்டரியை தீர்த்து விடும் உங்களுக்குத் தேவையென்றால் மட்டுமே இதை இயக்கவும். உங்கள் போனில் AMOLED அல்லது OLED திரை இருந்தால், டார்க் மோட் (Dark Mode) பயன்படுத்துவது நல்லது. கறுப்பு நிற பிக்சல்கள் திரையில் அணைக்கப்படுவதால் மின்சாரம் சேமிக்கப்படும்.
நீங்கள் பயன்படுத்தாதபோது வைஃபை (Wi-Fi), புளூடூத் (Bluetooth), NFC மற்றும் லொகேஷன் சேவைகளை (Location Services) அணைத்து வையுங்கள். இவை எப்போதும் இணைப்புகளைத் தேடிக்கொண்டிருப்பதால் பேட்டரி கரையும். பல செயலிகள் நீங்கள் பயன்படுத்தாதபோதும் பின்னணியில் இயங்கிக்கொண்டே இருக்கும். Settings > Battery பகுதிக்குச் சென்று எந்தெந்த செயலிகள் அதிக பேட்டரியை உறிஞ்சுகின்றன என்பதைக் கண்டறியுங்கள். தேவையில்லாத செயலிகளின் Background Activity அல்லது Push Notifications முடக்கலாம். செயலிகள் மற்றும் போனின் இயங்குதளத்தை (OS) அவ்வப்போது Update செய்யுங்கள். அப்டேட்களில் பேட்டரி பயன்பாட்டு மேம்பாடுகள் இருக்கலாம்.
உங்கள் போனை எப்படி சார்ஜ் செய்கிறீர்கள் என்பதும் பேட்டரி ஆயுளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உங்கள் போன் பேட்டரியை 0% ஆக குறைய விடாதீர்கள், மேலும் 100% வரை தொடர்ந்து சார்ஜ் செய்வதையும் தவிர்ப்பது நல்லது. லித்தியம்-அயன் பேட்டரிகள் (பெரும்பாலான மொபைல் பேட்டரிகள்) 20% முதல் 80% வரையிலான சார்ஜ் மட்டத்தில் சிறப்பாக செயல்படும். வெப்பம் பேட்டரி ஆயுளைக் குறைக்கும். போனை நேரடி சூரிய ஒளியில் வைப்பதையோ அல்லது தலையணையின் கீழ் வைத்து சார்ஜ் செய்வதையோ தவிருங்கள். சார்ஜ் செய்யும்போது போன் சூடானால், கேஸை கழற்றி வைக்கலாம். எப்போதும் உங்கள் போனுடன் வந்த அசல் சார்ஜரை அல்லது நம்பகமான பிராண்ட் சார்ஜரைப் பயன்படுத்துங்கள். தரமற்ற சார்ஜர்கள் பேட்டரியை சேதப்படுத்தலாம்.
டைப் செய்யும்போது அல்லது தொடுதலுக்கான அதிர்வுகளை (Haptic Feedback/Vibration) அணைத்து வைப்பது பேட்டரியைச் சேமிக்கும். முகப்புத் திரையில் (Home Screen) அதிக லைவ் விட்ஜெட்களைப் பயன்படுத்துவது அவை தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதால் பேட்டரியை உறிஞ்சும். வாரம் ஒருமுறை உங்கள் போனை Restart செய்வது, பின்னணியில் இயங்கும் தேவையற்ற செயல்முறைகளை அழித்து, பேட்டரி செயல்திறனை மேம்படுத்தும். இந்த எளிய டிப்ஸ் பின்பற்றுவதன் மூலம், உங்கள் மொபைல் பேட்டரியின் ஆயுளை கணிசமாக அதிகரிக்க முடியும்.