முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) நிறுவனத்தின் 45ஆவது ஆண்டு கூட்டம் (Annual General Meeting) இன்று (ஆகஸ்ட் 29) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. ரிலையன்ஸ் முதலீட்டாளர்கள் மற்றும் எதிர்கால முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்தநிலையில், ஜியோ 5ஜி நெட்வொர்க் சேவை மற்றும் குறைந்த விலையில் 5ஜி போனுக்கான திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் தீபாவளி முதல் 5ஜி சேவை மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார். முதற்கட்டமாக நான்கு நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் முதற்கட்டமாக ஜியோ 5ஜி இணைய சேவை வழங்கப்பட உள்ளது. தீபாவளிக்கு அதாவது அக்டோபர் மாதம் சேவை வழங்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ தேதி வெளியாவில்லை.
இதையும் படிங்க: https://tamil.indianexpress.com/technology/is-your-5g-smartphone-actually-good-enough-for-5g-networks-in-india-492374/
வருடாந்திர கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, நாட்டின் வளர்ச்சிக்கு ஜியோ நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. 5ஜி அனைவரும் பயன்படுத்தும்படி குறைந்த விலையில் கொடுக்க திட்டமிடப்பட்டு வருகிறது. 2023 டிசம்பரில் நாடு முழுவதும் 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும்.
5ஜியை அறிமுகப்படுத்த ரூ.2 லட்சம் கோடிக்கு மேலாக செலவிடப்பட்டுள்ளது. ஜியோவின் பிராட்பேண்ட் சேவையானது ஏழு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் நாட்டிலேயே மிகப்பெரியதாக உள்ளது. புதிய நெட்வோர்க் மாறுபவர்கள் அல்லது புதிய இணைப்பு கொடுப்பவர்கள் மூன்றில் இரண்டு பேர் இருவர் ஜியோ பிராட்பேண்டை தேர்வு செய்கின்றனர் எனத் தெரிவித்தார்.
இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26ஆம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கியது. 7 நாட்களாக 40 சுற்றுகளாக ஏலம் நடைபெற்று நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது.
ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.88 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது. பிரீமியம் 700 MHz அலைவரிசையை ஜியோ ஏலம் எடுத்துள்ளது. ஜியோவின் நேரடி போட்டியாளரான ஏர்டெல் ரூ.43,084 கோடி ஏலம் எடுத்தது.