உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக, கடந்த சில நாள்களாக தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைத் ரஷ்யாவில் நிறுத்து வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யாவில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களின் அணுகலை தடுத்திட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
ட்விட்டர் , பேஸ்புக் தவிர பல செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் ரஷ்யாவில் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு ஊடகத்துறையினர் கூறுகின்றனர்.
Der Spiegel செய்தி நிருபர் Mathieu von Rohr தனது ட்விட்டர் பக்கத்தில், ட்விட்டர், பேஸ்புக், பிபிசி மற்றும் Deutsche Welle போன்ற செய்தி நிறுவனங்களுக்கு ரஷ்யா தடை விதித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
அதேபோல், லாட்வியன் செய்தி தளமான Meduza, ரஷ்யாவில் உள்ள பல வாசகர்களால் தங்கள் வலைத்தளத்தை அணுக முடியவில்லை என்று கூறியுள்ளது.
இதற்கிடையில், பேஸ்புக் நிர்வாகி நிக் கிளெக் கூறுகையில், " ரஷ்ய அரசுக்கு சொந்தமான நான்கு ஊடக நிறுவனங்கள் பேஸ்புக்கில் இல் பதிவிடும் உள்ளடக்கத்தை உண்மைச் சரிபார்ப்பது மட்டுமின்றி லேபிளிங் செய்வதை நிறுத்துமாறு நேற்று ரஷ்ய அதிகாரிகள் எங்களுக்கு உத்தரவிட்டனர். ஆனால், நாங்கள் அதை ஏற்க மறுத்துவிட்டோம். அதன் விளைவாக, தற்போது ரஷ்யாவில் பேஸ்புக் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நடவடிக்கைக்கான காரணம் சரியாக தெரியவில்லை. ஆனால் ரஷ்ய அரசு உலகின் பிற பகுதிகளிலிருந்து வரும் செய்திகள் மற்றும் கருத்துகளுக்கான அணுகலைத் துண்டித்து, அதன் சொந்த பிரச்சாரத்தை மட்டுமே மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முயற்சிக்கிறது என்பதை கணிக்க முடிகிறது.
ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்களில், உலகத் தலைவர்கள், செய்தி நிறுவனங்கள், பொது மக்கள் என அனைவரும் தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். அப்போது, புதினுக்கு எதிரான கருத்துக்களும், ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், போரைப் பற்றி விமர்சித்தும் பலர் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil