/indian-express-tamil/media/media_files/2025/06/27/odyssey-3d-2025-06-27-22-09-00.jpg)
கேமிங் பிரியர்கள் கவனத்திற்கு.. செம்ம அப்டேட்; சாம்சங் ஓடிஸி 3D மானிட்டர் அறிமுகம்!
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேமிங் மானிட்டரான சாம்சங் ஓடிஸி 3D-ஐ (ஜூன் 27) அறிவித்துள்ளது. இது, கண்ணாடிகள் இல்லாமலேயே 3D அனுபவத்தை வழங்கும் புரட்சிகரமான தயாரிப்பாகும். 3D காட்சிகளுடன் தொடர்புடைய அசௌகரியங்களை இந்த புதிய மானிட்டர் நீக்கும் என்று சாம்சங் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இதுகுறித்து சாம்சங் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், டிஸ்பிளே புதுமை சாம்சங் உறுதிப்பாட்டை ஓடிஸி 3D பிரதிபலிக்கிறது. கேமர்களுக்கு சிறந்த, கூர்மையான 3D அனுபவத்தை வழங்குகிறது. அதே நேரத்தில், 2D உள்ளடக்கத்திற்காகவும் உயர்தர செயல்திறனை பராமரிக்கிறது. இந்த புரட்சிகர மானிட்டர், அதிவேக கேமிங்கை மறுவரையறை செய்வதுடன், கேமிங் மானிட்டர் சந்தையில் சாம்சங்கின் தலைமைத்துவத்தையும் உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளது.
எப்படி வேலை செய்கிறது இந்த கண்ணாடிகள் இல்லாத 3D தொழில்நுட்பம்?
சாம்சங் ஓடிஸி 3D மானிட்டர், கண்ணாடிகள் இல்லாத 3D காட்சிகளை உருவாக்க மூன்று முக்கிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது: கண் கண்காணிப்பு (eye-tracking), காட்சி மேப்பிங் (view mapping), லெண்டிகுலார் லென்ஸ் (lenticular lens). முதலில், மானிட்டரின் மேல் பகுதியில் உள்ள 2 ஸ்டீரியோ கேமராக்கள் பயனரின் கண் அசைவுகளை நிகழ்நேரத்தில் கண்டறிந்து கண்காணிக்கின்றன. இந்த கேமராக்கள் பயனரின் கண்களுக்கும் மானிட்டருக்கும் இடையிலான தூரத்தை அளவிடுகின்றன. பயனர் கண்ணாடிகள் அணிந்திருந்தாலும், இந்தத் தொழில்நுட்பம் துல்லியமாக செயல்படும்.
கண்காணிப்பு கேமராக்கள் பிடித்த படங்களின் அடிப்படையில், மானிட்டர் துல்லியமான பிக்சல் நிலையைக் கணக்கிட்டு, காட்சி மேப்பிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 3D படத்தை உருவாக்குகிறது. இறுதியாக, ஓடிஸி 3D-யின் லெண்டிகுலார் லென்ஸ் ஒளிவிலகல் (light refraction) மூலம் இறுதிப் படங்களை ஒவ்வொரு கண்ணுக்கும் தனித்தனியாக அனுப்புகிறது. பயனர் அசைந்தாலும் மானிட்டர் தன்னை மறுசீரமைத்துக் கொள்ளும். இந்த லெண்டிகுலார் லென்ஸ், பயனர் 3D பயன்முறையை இயக்கும்போது மட்டுமே செயல்படும்.
மேம்பட்ட செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள்:
ஓடிஸி 3D மானிட்டர் அதன் 3D அம்சத்துடன் நின்றுவிடவில்லை; இது குறிப்பிடத்தக்க செயல்திறன் மேம்பாடுகளுடனும் வருகிறது. இது 165 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1 ms ரெஸ்பான்ஸ் டைம் ஆகியவற்றுடன், வேகமான மற்றும் மென்மையான கேமிங் அனுபவத்தை உறுதி செய்கிறது. மேலும், இந்த மானிட்டர் NVIDIA G-Sync இணக்கத்தன்மையையும் கொண்டுள்ளது.
"க்ராஸ்ஸ்டாக்" (crosstalk) எனப்படும் பார்வைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் தவறான பட சீரமைப்புகளைத் தடுக்க, சாம்சங் 'போஸ்ட்-அசெம்பிளி காலிப்ரேஷன்' (post-assembly calibration), 'ஹார்டுவேர்-ஸ்பெசிபிக் டேட்டா ஸ்டோரேஜ்' (hardware-specific data storage) மற்றும் 'டீப் லேர்னிங் அடிப்படையிலான கண் கண்காணிப்பு அல்காரிதம்' (deep learning-based eye-tracking algorithm) போன்ற புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளது.
இந்த மானிட்டர், ஒளி விலகல் மற்றும் கண்ணை கூசும் தன்மையைக் குறைத்து, படத் தெளிவை மேம்படுத்தும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட டிஸ்பிளே செல் கோட்டிங்கையும் (display cell coating) கொண்டுள்ளது. இந்த மானிட்டரின் அதிகாரப்பூர்வ விலை இன்னும் சாம்சங் நிறுவனத்தால் அறிவிக்கப்படவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.