நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கட்டணம் செலுத்துவதை தவிர்க்க மற்றும் நேரத்தை மிச்சப்படுத்த மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை பாஸ்டேக் முறையை அறிமுகப்படுத்தியது. பாஸ்டேக் முறையின் மூலம் சுங்கச்சாவடி கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தப்பட வேண்டும். இது சுங்கச்சாவடியில் காத்திருக்கும் நேரம் மற்றும் போக்குவரத்து நெரிசலை பெரும்மளவு குறைத்துள்ளது. பாஸ்டேக் முறை
நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முன்பு ஒரு மணி நேரத்துக்கு 112 வாகனங்கள் மட்டுமே சுங்கச்சாவடியை கடந்த நிலையில், தற்போது 260 வாகனங்கள் ஒருமணி நேரத்தில் சுங்கச்சாவடியை கடக்கின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சுங்கச்சாவடிக்கான பாஸ்டேக் கட்டணங்கள் பல வழிகளில் செலுத்தலாம். ஏர்டெல், ஜியோ போன்ற தொலைதொடர்பு நிறுவனங்களின் ஆப் மூலம் செலுத்தலாம். கூகுள் பே, போன் பே போன்ற பண பரிவர்த்தனை ஆப்கள் மூலமும் செலுத்தலாம். அல்லது பேங்க் ஆப் மூலமாகவும் பாஸ்டேக் கட்டணம் செலுத்தலாம்.
அந்தவகையில், எஸ்பிஐ வங்கி தங்களது பயனர்களுக்காக ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது எஸ்பிஐ பாஸ்டேக் பயனராக இருந்தால், எஸ்எம்எஸ் மூலம் பாஸ்டேக் பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம்.
எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் பாஸ்டேக் கட்டணம் செலுத்தும் பயனர்களுக்கு இது பொருந்தும். எஸ்பிஐ பாஸ்டேக் பயனர்கள் தங்கள் பாஸ்டேக் பேலன்ஸை தெரிந்து கொள்ள, பயனர்கள் தாங்கள்
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7208820019 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இதனை செய்தவுடன் எஸ்பிஐ பாஸ்டேக் பேலன்ஸ் எஸ்எம்எஸ்ஸாக அனுப்பப்படும்.
எப்படி செய்வது?
- வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து FTBAL என டைப் செய்து, 7208820019 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். பாஸ்டேக் பேலன்ஸ் உங்கள் போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் வந்துவிடும்.
- அடுத்து, ஒரே வங்கி கணக்கு, மொபைல் எண்ணில் வேறுவேறு வாகனங்களுக்கு பாஸ்டேக் பயன்படுத்துகிறீர்கள் என்றால் FTBAL என டைப் செய்து குறிப்பிட்ட வாகன எண் டைப் செய்து 7208820019 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.