/indian-express-tamil/media/media_files/2025/05/29/BKpo61kwNVlBpvujLRQk.jpg)
ஆதி மனிதனின் அற்புத கலை: 20,000 ஆண்டுகளுக்கு முந்தைய திமிங்கல எலும்பு கருவிகள் கண்டுபிடிப்பு!
ஆதி மனிதர்கள் திமிங்கல எலும்புகளிலிருந்து கருவிகளைச் செய்ததற்கான மிகப் பழமையான ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அருகே உள்ள பிஸ்கே விரிகுடாவில் நூற்றாண்டுக்கும் மேலாக நடந்த அகழ்வாராய்ச்சிகளில் கடல் வேட்டைக்கான கூர்மையான எறிகணைகளாக உருவாக்கப்பட்ட இந்த எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்தக் கருவிகள் மிகப்பழமையானவை என விஞ்ஞானிகள் கருதினர். ஆனால், அவை சிறிய துண்டுகளாக இருந்ததால் வயதைக் கண்டறிவது கடினமாக இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்கள், இந்தக் கருவிகளில் மிகப் பழமையானவற்றின் வயதை சுமார் 20,000 ஆண்டுகள் பழமையானது எனத் துல்லியமாகக் கண்டறிய உதவியுள்ளன.
இந்தக் கருவிகள் நீல திமிங்கலங்கள், ஃபின் திமிங்கலங்கள், ஸ்பெர்ம் திமிங்கலங்கள் மற்றும் பிற வகை திமிங்கலங்களின் எலும்புகளிலிருந்து உருவானவை என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். திமிங்கல வேட்டையின் வரலாற்றை ஆய்வு செய்யும் மேற்கு கரோலினா பல்கலை. விக்கி சாபோ, இந்தப் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை என்றாலும், "மனிதர்களும் திமிங்கலங்களும் நீண்ட காலமாகவே சந்தித்து வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது" என்று கூறினார்.
ஆதி மனிதர்கள் ஆர்க்டிக், தென்பசிபிக் போன்ற பகுதிகளில் திமிங்கல எலும்பு கருவிகளை உருவாக்கி வந்ததாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். திமிங்கல எலும்பு கருவிகள் 5,000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் ஏற்கனவே இருந்தன. ஆனால், 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' இதழில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட புதிய ஆராய்ச்சி, இந்த காலக்கெடு மேலும் முன்னோக்கித் தள்ளியுள்ளது. ஆராய்ச்சி ஆசிரியரும், பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்தவருமான ஜீன்-மார்க், ஆதி மனிதர்கள் திமிங்கலங்களை வேட்டையாடிதான் எலும்புகளைப் பெற்றார்கள் என்று கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆதி மனிதர்கள், கடலோரங்களில் ஒதுங்கிய திமிங்கலங்களின் உடல்களைப் பயன்படுத்தியே, அவற்றின் அடர்த்தியான, கனமான எலும்புகளை கலைமான்கள் அல்லது காட்டெருமைகளை வேட்டையாடும் கருவிகளாக மாற்றியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்தக் கருவிகள், அப்பகுதியில் வாழ்ந்த பழங்கால மக்கள் தங்கள் உயிர்வாழ்விற்காக கடல் அருகே உள்ள வளங்களைப் பயன்படுத்திக் கொண்டதைக் காட்டுகிறது. அவர்கள் கடற்சிப்பிகளையும் சேகரித்து மீன்பிடித்தும் இருக்க வாய்ப்புள்ளது.
உலகம் முழுவதும் கடல் மட்டம் உயர்ந்து வருவதால், இத்தகைய ஆதாரங்களைக் கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது என விஞ்ஞானிகள் கூறினர். "இது, நீண்ட காலத்திற்கு முன்பே மனிதக் குழுக்களுக்கு கடலோரச் சூழலின் முக்கியத்துவத்தை மேலும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது," என்று பெட்டில்லான் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.