/indian-express-tamil/media/media_files/2025/06/07/QEgdMMYDgKnaBV4mHSWw.jpg)
கடலில் போட்டால் உடனே கரையும் பிளாஸ்டிக்: அசரவைக்கும் ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு
உலகெங்கிலும் கடல் மாசுபாடு ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று பிளாஸ்டிக் என்பதில் சந்தேகமில்லை. மைக்ரோபிளாஸ்டிக் எனப்படும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் நமது உணவில் கலந்திருப்பது மட்டுமல்லாமல், பிறக்காத குழந்தைகளின் நஞ்சுக்கொடியிலும் ஊடுருவியுள்ளது. மேலும், உலகின் ஆழமான பகுதியான மரியானா அகழி வரையிலும் இந்த பிளாஸ்டிக் சென்றடைந்துள்ளது. இருப்பினும், ஜப்பான் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட புதிய வகை பிளாஸ்டிக், கடல் மாசுபாட்டைக் குறைக்க உதவக்கூடும் என சொல்லப்படுகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ஜப்பானின் ரைகென் வளர்ந்துவரும் RIKEN Centre for Emergent Matter Science மற்றும் டோக்கியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் இந்த புதிய பிளாஸ்டிக் உருவாக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியத்திலிருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்கிற்கு இணையான வலிமையைக் கொண்டுள்ளது. பிளாஸ்டிக்குகள் மக்குவதற்கு 20 முதல் 500 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ளும். மாறாக, இந்தப் புதிய பிளாஸ்டிக் உப்புநீரில் போட்டவுடன் சிதைந்துவிடும் தன்மை கொண்டது.
இந்த பிளாஸ்டிக் கூறுகள், நீரில் இருக்கும் பாக்டீரியாக்களால் சிதைக்கப்படுகின்றன. இதன் விளைவாக, மைக்ரோபிளாஸ்டிக் அல்லது நானோபிளாஸ்டிக் துகள்கள் எதுவும் மிஞ்சுவதில்லை. ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனத்தின்படி, டோக்கியோவிற்கு அருகிலுள்ள வாக்கோ நகரில் (Wako City) உள்ள ஆய்வகத்தில், ஆராய்ச்சியாளர்கள் புதிய மக்கும் பிளாஸ்டிக் பொருளைச் செய்து காட்டினர். அந்த செயல்விளக்கத்தின் போது, உப்பு நீரில் சுமார் ஒரு மணி நேரத்தில் அந்தப் பொருள் எவ்வாறு கரைகிறது என்பதை அவர்கள் விளக்கிக் காட்டினர்.
மண்ணிலும் உப்புத்தன்மை இருப்பதால், அங்கும் இந்த பிளாஸ்டிக் கரையுமா? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், இந்த புதிய பிளாஸ்டிக் தரைக்கு அடியில் முழுமையாகச் சிதைவதற்கு சுமார் 200 மணி நேரம் ஆகும். மேலும், இந்த புதிய பிளாஸ்டிக் மனிதர்களுக்கு நச்சுத் தன்மை இல்லாததாகவும், தீப்பிடிக்காத தன்மை கொண்டதாகவும், கரியமில வாயுவை (Carbon Dioxide) வெளியிடாததாகவும் தெரிகிறது. இந்தப் பொருள் இன்னும் வணிக ரீதியான பயன்பாட்டிற்குத் தயாராகவில்லை என்றும், ஆனால் இதன் மீது பூச்சுப் படலத்தை உருவாக்கும் முறையில் தாங்கள் தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
இந்தத் திட்டத்தின் தலைவர் டகுசோ அய்டா (Takuzo Aida) கூறும்போது, தங்களின் இந்த ஆராய்ச்சி, packaging துறையில் உள்ள நிறுவனங்களிடம் இருந்து ஏற்கனவே குறிப்பிடத்தக்க ஆர்வத்தை ஈர்த்துள்ளது என்றார்.
ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UN Environment Programme) படி, 2040-ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் மாசுபாடு தற்போது இருப்பதை விட 3 மடங்கு அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் 23 முதல் 37 மில்லியன் மெட்ரிக் டன் வரையிலான பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் மட்டும் சேரும். கடந்த ஆண்டு, 'நேச்சர்' (Nature) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், உலகளாவிய பிளாஸ்டிக் மாசுபாட்டில் ஐந்தில் ஒரு பங்கிற்கு இந்தியா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நம் நாடு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5.8 மில்லியன் டன் பிளாஸ்டிக்கை எரிக்கிறது. அதோடு, மேலும் 2.5 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை நிலம், காற்று மற்றும் நீரில் குப்பைகளாகக் கலக்கிறது. இது இந்தியாவை உலகின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மாசுபடுத்தும் நாடாக மாற்றுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.