Send Your Name To Mars: நாசாவின் மார்ஸ் 2020 மிஷன் சிவப்பு கிரகத்தின் காலநிலை, புவியியல் ஆகியவற்றை ஆய்வு செய்வதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள கணிம வளங்களின் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரோவர் ஜூலை 2020 இல் விண்ணில் செலுத்தப்பட்டு, பிப்ரவரி 2021 க்குள் செவ்வாய் கிரகத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் ரோவரில் உள்ள மைக்ரோசிப்பில் உலகெங்கிலும் உள்ள மக்களின் பெயர்களைப் பொறிக்க நாசா ஏற்பாடு செய்துள்ளது.
நாம், நமது பெயர்களை செப்டம்பர் 30 க்கு முன்னர் (https://mars.nasa.gov/participate/send-your-name/mars2020) என்ற இணையத் தளத்திற்குச் சென்று சமர்ப்பிக்கலாம்.
சமர்ப்பிக்கப்பட்ட பெயர்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் உள்ள மைக்ரோ டிவைசஸ் ஆய்வகம் எலக்ட்ரான் கற்றை பயன்படுத்தி சிலிக்கான் சிப்பில் பெயர்களைப் பொருத்திவிடும்.
இதுவரை 9.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் பெயர்களை சமர்ப்பித்துள்ளனர்.
வாஷிங்டனில் உள்ள நாசாவின் அறிவியல் மிஷன் இயக்குநரகத்தின் இணை நிர்வாகி தாமஸ் சுர்பூச்சென் கூறுகையில், "இந்த வரலாற்று சிறப்புமிக்க செவ்வாய் கிரக ஆய்வு பயணத்தில் அனைவரும் பங்குபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், நாசாவுக்கு இது ஒரு உற்சாகமான நேரம்" என்றார்.