/indian-express-tamil/media/media_files/2025/08/04/august-sky-guide-2025-08-04-12-07-56.jpg)
விண்கல் மழை முதல் கோள் சங்கமம் வரை... இந்திய வானில் காத்திருக்கும் கண்கவர் காட்சிகள்!
இந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் வானில் பல்வேறு வியக்க வைக்கும் நிகழ்வுகள் அரங்கேற உள்ளன. விண்கற்களின் அணிவகுப்பு முதல் சந்திரன் மற்றும் கோள்களின் சேர்க்கை வரை, பல அற்புதமான காட்சிகள் இரவு வானில் நம் கண்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கின்றன. ஆகஸ்ட் மாதம் முழுவதும் வானியல் நிகழ்வுகளை கண்டுரசிக்க சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
ஆகஸ்ட் 12–13: விண்கல் மழை
ஒவ்வொரு ஆண்டும் நிகழும் விண்கல் மழைகளில், பெர்சிட்ஸ் (Perseids) விண்கல் மழை மிக முக்கியமானது. ஜூலை மாத இறுதியிலேயே தொடங்கிவிட்ட இந்த நிகழ்வு, ஆகஸ்ட் 24 வரை தொடரும். ஆகஸ்ட் 12 மற்றும் 13-ம் தேதிகளில் இது உச்சத்தை அடையும். சாதாரணமாக, பெர்சிட்ஸ் விண்கல் மழையின்போது மணிக்கு 150 விண்கற்கள் வரை விழும். அதாவது, ஒவ்வொரு நிமிடமும் 2 அல்லது 3 விண்கற்களைப் பார்க்க முடியும். ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று பௌர்ணமி வருவதால், முழு நிலவின் ஒளி மங்கலான விண்கற்களை மறைக்கக் கூடும். இருப்பினும், நீங்கள் நகரப் பகுதிகளிலிருந்து விலகி, இருண்ட இடங்களுக்குச் சென்றால், சில விண்கற்களைப் பார்க்க முடியும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்தியாவில், ஆகஸ்ட் 13-ம் தேதி நள்ளிரவு முதல் சூரிய உதயத்திற்கு முன் வரை இந்த விண்கல் மழையைக் காண்பது சிறந்தது. ஸ்பிதி, லடாக், ரான் ஆஃப் கட்ச் அல்லது கர்நாடகா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் கிராமப்புறங்கள் போன்ற நகர வெளிச்சம் இல்லாத இடங்களைத் தேர்ந்தெடுப்பது அற்புதமான காட்சியைப் பார்க்க உதவும். ஆகஸ்ட் 12-13ஐ தவறவிட்டாலும் கவலைப்பட வேண்டாம். ஆகஸ்ட் 16 முதல் 20 வரையிலான நாட்களில், நிலவொளி குறையத் தொடங்கி வானம் இருண்ட பிறகு, சில விண்கற்களை இன்னும் காண முடியும்.
ஆகஸ்ட் 26: செவ்வாயுடன் சந்திரன் சங்கமம்
மாதத்தின் பிற்பகுதியில், மற்றொரு அழகான நிகழ்வு வானில் நிகழும். ஆகஸ்ட் 26 ஆம் தேதி, சூரியன் மறைந்த பிறகு மேற்கு வானில், மெல்லிய பிறை சந்திரனுடன், சிறிய சிவப்பு நிறப் புள்ளியாக செவ்வாய் கிரகம் (Mars) தோன்றும். இந்த இரண்டும் இரவு 8:15 மணியளவில் ஒரு மணி நேரம் வரை ஒன்றாகத் தோன்றும்.
ஆகஸ்ட் 12 (அதிகாலை): அதிகாலையில் கிழக்கு வானில் வெள்ளி (Venus) மற்றும் வியாழன் (Jupiter) கிரகங்கள் மிகவும் அருகில், 1 டிகிரி தூரத்தில், 2 பிரகாசமான நட்சத்திரங்களைப் போல இணைந்து உதயமாகும்.
ஆகஸ்ட் 19: சூரிய உதயத்திற்கு முன் கிழக்கு வானில் புதன் (Mercury) கிரகத்தைப் பார்ப்பதற்கு இதுவே சிறந்த நேரம். இது மிகவும் சிறியதாக இருப்பதால், அதைக் கண்டுபிடிக்க ஸ்டார்கேசிங் ஆப் (stargazing app) பயன்படுத்தலாம்.
ஆகஸ்ட் 23: அமாவாசை (New Moon) நிலவொளி இல்லாததால், மங்கலான நட்சத்திரங்கள் மற்றும் பால்வெளி மண்டலத்தைக் கூட தெளிவாகக் காண இது சிறந்த வாய்ப்பு.
வானியல் காட்சிகளை ரசிக்க சில குறிப்புகள்:
நகரத்திலிருந்து 30-40 நிமிடங்கள் பயணம் செய்தாலே வானம் தெளிவாகத் தெரியும். இருளுக்கு உங்கள் கண்கள் பழக 15-20 நிமிடங்கள் ஆகும். SkyView, Stellarium அல்லது Sky Map போன்ற ஆப்ஸ்கள் நீங்கள் எங்கு பார்க்க வேண்டும் என்பதை அறிய உதவும். அசௌகரியமாக உணராமல் உடை அணியுங்கள். ஆகஸ்ட் மாதத்திலும் இரவில் குளிர்ந்த காற்று வீசக்கூடும். உங்கள் தொலைபேசியை ஒதுக்கி வையுங்கள் அல்லது அதன் திரையை மங்கலாக வைக்கவும். தொலைபேசி ஒளி உங்கள் இரவுப் பார்வையை கெடுத்துவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.