/indian-express-tamil/media/media_files/2025/07/14/shubhanshu-shukla-returning-to-earth-2025-07-14-22-06-50.jpg)
பூமிக்கு புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா... திரும்பும் பயணத்தின் சவால்கள் என்னென்ன? தரையிறங்குவது எங்கே?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO) பயிற்சி பெற்ற இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, ஆக்சியம் மிஷன் 4 (Ax-4) குழுவினருடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தனது பணியை முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பியுள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து கடந்த மாதம் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்தார் சுபான்ஷு சுக்லா.ஆக்சியம்-4 குழுவினர், விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்து 60-க்கும் மேற்பட்ட அறிவியல், தொழில்நுட்பச் சோதனைகளில் ஈடுபட்டனர். இதில் உயிரியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் பொருள் அறிவியல் தொடர்பான ஆய்வுகள் அடங்கும். குறிப்பாக, சுபான்ஷு சுக்லா, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட விண்வெளி விவசாயத் திட்டங்களான பாசிப்பயறு மற்றும் வெந்தய விதைகள் முளைக்கச் செய்தல், மைக்ரோ ஆல்கா வளர்த்தல் போன்ற திட்டங்களில் முக்கியப் பங்காற்றினார். நரம்பணுவியல், உயிரி மருத்துவ அறிவியல், வேளாண்மை, விண்வெளித் தொழில்நுட்பம் என பல்வேறு பரிமாணங்களில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை சுக்லா உள்ளிட்ட 4 வீரா்களும் மேற்கொண்டனா்.
திட்டமிடப்பட்டபடி, ஜூலை 14 அன்று இந்திய நேரப்படி மாலை 4:35 மணியளவில் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து, பூமி நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது. "கிரேஸ்" என்று செல்லப்பெயர் சூட்டப்பட்ட இந்த டிராகன் விண்கலம், பல்வேறு மறுநுழைவு நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஜூலை 15 இன்று இந்திய நேரப்படி மதியம் 3 மணியளவில் கலிபோர்னியா கடற்கரைக்கு அப்பால் பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரும்பும் பயணத்தின் சவால்கள்:
விண்வெளி வீரர்களின் பூமிக்குத் திரும்பும் பயணம் பல்வேறு சவால்களைக் கொண்டது. விண்கலம் ISS-ல் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த பிறகு, புதிய சுற்றுப்பாதைக்கு தன்னை மாற்றிக்கொள்ளும். பூமியில் தரையிறங்குவதற்கான மிக முக்கியமான செயல்பாடு, விண்கலத்தின் வேகத்தைக் குறைத்து சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறச் செய்யும் "deorbit burn" ஆகும். இதற்கு சற்று முன்னதாக, விண்கலம் தனது சூரிய தகடுகள் மற்றும் ரேடியேட்டர்களைக் கொண்ட அடிபாகத்தை (trunk section) கழற்றிவிடும்.
கடும் வெப்பம்: விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது, மணிக்கு சுமார் 28,000 கி.மீ. வேகத்தில் பயணிக்கும். இதனால் வெளிப்புற வெப்பநிலை 1,900°C-க்கும் அதிகமாக உயரும். சிறப்பு வெப்பக் கவசம் இந்த வெப்பத்தைத் தடுத்து, விண்கலத்தின் உட்புறத்தைப் பாதுகாக்கும்.
தொடர்பு துண்டிப்பு: அதிக வெப்பமானத்தில், விண்கலத்தைச் சுற்றி அயனியாக்கப்பட்ட வாயுக்கள் உருவாகும். இதனால் சுமார் 6 முதல் 7 நிமிடங்கள் வரை தரை கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு துண்டிக்கப்படும்.
பாரசூட் தரையிறக்கம்: சுமார் 5,500 மீட்டர் உயரத்தில் 2 சிறிய "drogue" பாரசூட்டுகள் வெளியாகி விண்கலத்தை நிலைப்படுத்தும். சில வினாடிகளுக்குப் பிறகு, 4 பெரிய பிரதான பாரசூட்டுகள் விரிந்து, விண்கலத்தின் வேகத்தை மணிக்கு 24-32 கி.மீ. வரை குறைத்து பாதுகாப்பான தரையிறக்கத்தை உறுதிப்படுத்தும்.
தரையிறக்கம் மற்றும் மீட்பு: விண்கலம் கடலில், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட மீட்புப் பகுதிக்குள் தரையிறங்கும். அங்கு விரைவுப் படகுகளுடன் கூடிய ஸ்பேஸ்எக்ஸ் மீட்புக் கப்பல் மருத்துவ மற்றும் தொழில்நுட்பக் குழுக்களுடன் காத்திருக்கும். விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
சுபான்ஷு சுக்லாவின் இந்தப் பயணம், இந்தியாவின் விண்வெளித் திட்டங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் தனது அனுபவங்களை இஸ்ரோவின் தலைவர் வி. நாராயணன் மற்றும் இந்தியக் குழந்தைகளுடன் பகிர்ந்துகொண்டார். பிரதமர் நரேந்திர மோடியும், சுக்லாவின் சாதனைகளைப் பாராட்டி, அவரது பயணம் ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். சுக்லாவின் விண்வெளிப் பண்ணை சோதனை, இந்தியாவின் எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கு ஒருபெரிய படி என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.