புளூட்டோவை மீண்டும் சூரிய குடும்பத்தில் சேர்க்க வேண்டும் என கடிதம் அனுப்பிய அயர்லாந்து நாட்டை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு நாசா பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி மையமானது, புளூட்டோவை கோள் அல்ல எனவும், அது துணைக்கோள் அல்லது குள்ள கோள் தான் எனவும் அறிவித்தது. இதனால், சூரிய குடும்பத்திலிருந்து புளூட்டோ விடுவிக்கப்பட்டது.
இந்நிலையில், 12 ஆண்டுகள் கழித்து, அயர்லாந்து நாட்டை சேர்ந்த காரா என்ற 6 வயது சிறுமி, புளூட்டோவை கோள் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி நாசாவுக்கு ஆசிரியர் உதவியுடன் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் காரா குறிப்பிட்டுள்ளதாவது, “நான் கேட்ட ஒரு பாடலில் புளூட்டோவை மீண்டும் சூரிய குடும்பத்தில் இணைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனக்கும் அது நிறைவேற வேண்டும் என விரும்புகிறேன்.
புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கோள்களைப் போல் புளூட்டோவும் ஒரு முக்கியமான கோள்தான்.
நான் பார்த்த மற்றொரு வீடியோவில், புளூட்டோவானது பூமியால் குப்பையில் போடப்பட்டதாக இருந்தது. எந்தவொரு கோளும் குப்பையில் போடப்படக் கூடாது.”, என குறிப்பிடப்பட்டிருந்தது.
6 வயது சிறுமியின் ஆர்வத்தைக் கண்ட நாசாவின் கோள்கள் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஜேம்ஸ் க்ரீன், சிறுமிக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், “புளூட்டோ குளிர்ச்சியானதுதான் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இன்னும் சிலர் புளூட்டோவுக்கு இதயம் உண்டு எனவும் நம்புகின்றனர். என்னைப் பொறுத்தவரை புளூட்டோ கோளா? இல்லையா? என்பது முக்கியமல்ல. நாம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டிய சுவாரஸ்யங்களை கொண்டிருப்பதுதான் புளூட்டோ.
நீ ஒரு புதிய கோளைக் கண்டுபிடிப்பாய் என நம்புகிறேன். நீ பள்ளியில் நன்றாக படித்தால், உன்னை ஒருநாள் நாசாவில் பார்ப்பேன் என நம்புகிறேன்”, என அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.