/indian-express-tamil/media/media_files/2025/05/04/e3GzDfp0onGAmaq8lWnU.jpg)
சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் உற்சாக நடனம் - வீடியோ வைரல்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் டான் பெடிட் ஆகியோர் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையின்போது துள்ளல் நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, அவர்களின் நீண்ட மற்றும் கடினமான விண்வெளி பயணத்தின்போது ஏற்பட்ட கலகலப்பான தருணங்களை விண்வெளி ஆர்வலர்களுக்கு நினைவூட்டுகிறது.
Two-step dancing in space.
— A. Pettit (@PettitFrontier) May 1, 2025
pic.twitter.com/UdiZ0k7qUf
இந்த வீடியோவில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் டான் பெட்டிட் ஆகியோர், சர்வதேச விண்வெளி நிலையத்தின் பூஜ்ஜிய ஈர்ப்பு சூழலில் மிதந்து சுழன்று மகிழ்வதைக் காணலாம். ஒருவருக்கொருவர் உற்சாகமாகச் சுழலும் தருணங்களும் இதில் பதிவாகி உள்ளன. இந்த வீடியோ, அவர்களது விண்வெளி பயணத்தை முடித்து பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய பிறகு வெளியிடப்பட்டது. இது சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தபோது எடுக்கப்பட்டது. அவர்கள் இருவரும் எடையற்ற தன்மையின் முழுப் பயனையும் பெற்று, சர்வதேச விண்வெளி மையத்தின் தொகுதிகள் வழியாக இலகுவாகவும், விளையாட்டுத்தனமாகவும் நகர்ந்து, தன்னிச்சையான நடனத்தை நிகழ்த்தினர். சர்வதேச விண்வெளி மையத்திற்கு 3 முறை சென்று வந்துள்ள சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி நிலையத்திற்குள் நுழையும்போது நடனமாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இது அவரது குழுவினருக்கும், பூமியில் உள்ள ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்று சொல்லலாம்.
அவர்களது மகிழ்ச்சியான நடனம் ஒரு களிப்பான தருணத்தை மட்டுமல்ல; நீண்ட கால விண்வெளிப் பயணங்களின்போது மனவுறுதி மற்றும் மனநலத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. வில்லியம்ஸ் மற்றும் பெடிட்டிட் கலகலப்பான மனநிலை ஊக்கமளிக்கும் செய்தியாக அமைந்தது. விண்வெளியின் கடுமையான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சூழலிலும், விண்வெளி வீரர்கள் வாழ்க்கையை கொண்டாடவும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளவும் வழிகளைக் கண்டுபிடிப்பதை இது காட்டுகிறது.
சுனிதா வில்லியம்ஸ் சமீபத்தில் 9 மாதங்களுக்கும் மேலாக நீடித்த விண்வெளி பயணத்திற்குப் பிறகு பூமிக்குத் திரும்பினார். அவரது ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக முதலில் திட்டமிடப்பட்டதை விட மிக நீண்ட காலம் நீடித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.