புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்றிரவு (புதன்கிழமை) அட்லஸ் 5 ராக்கெட் மூலம் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் நாசாவின் மற்றொரு வீரர் பட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். 25 மணி நேரம் பயணித்து இவர்கள் விண்வெளி நிலையம் சென்றடைவர்.
போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தை சோதனை செய்யவே இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் முறையாக மனிதர்களுடன் ஏவப்பட்ட போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தின் திறனை சோதிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். குறிப்பாக விண்கலம் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்து செல்ல ஏற்றதா? அங்கிருந்து திரும்புவதற்கும் ஏற்றதா என்பதை சோதனை செய்வதாகும்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் வழியில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் ட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலத்தின் தனித்துவமான திறனை சுற்றுப்பாதையில் சோதனை செய்வர் என்று நாசா கூறியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளி சென்ற முதல் நபர்கள் என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர். இந்த சோதனை வெற்றியடைந்தால் ஸ்பேஸ் எக்ஸிற்கு அடுத்தபடியாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் 2-வது நிறுவனமாக ஸ்டார்லைனர் இருக்கும்.
58 வயதான வில்லியம்ஸ் இந்த திட்டத்தின் பைலட்டாகவும், 61 வயதான வில்மோர் கமேண்டர் ஆகவும் உள்ளார். நாசா கூற்றுப்படி, வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஜூன் 6, வியாழன் ET நேரப்படி 12:15 மணியளவில் விண்வெளி நிலையம் வென்றடைவர் என்று கூறியுள்ளது.
முன்னதாக, மே 7, ஜுன் 1 ஆகிய 2 முறை தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“