புவி வெப்பமயமாதல் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட தமிழருக்கு தைவானில் பரிசு

ஸ்க்ரிப்ஸ் கடல்சார் கல்வி நிலையத்தில் பணியாற்றும் தமிழர் வீரபத்ரன் ராமநாதன் அவருக்கு தைவானின் டாங் பரிசு அறிவிப்பு

கலிபோர்னியாவில் இருக்கும் ஸ்க்ரிப்ஸ் கடல்சார் அறிவியல் மையத்தில், வளி மண்டலம் மற்றும் காலநிலைப் பிரிவின் பேராசிரியராக பணியாற்றும் இந்திய வம்சாவளி டாக்டர். வீரபத்ரன் ராமநாதன் அவர்களுக்கு தைவானின் டாங் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஜேம்ஸ் ஹான்சன், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் காலநிலை மாற்றம், விழிப்புணர்வு மற்றும் தீர்வுகள் தொடர்பான திட்டத்தின் இயக்குநராக பணியாற்றிவருகின்றார். இவருக்கும் இந்த வருடம் பரிசினை அளித்து சிறப்பித்திருக்கின்றது தைவான்.

நிலையான மேம்பாட்டிற்காக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு அளிக்கப்படும் தைவானின் டாங் பரிசினை இம்முறை, உலக சுற்றுச் சூழலை அச்சுறுத்தும் காரணிகள் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவரும் இவ்விருவருக்கும் அளித்திருக்கின்றது. தொடர்ந்து மூன்று வருடங்களாக டாங் பரிசினை தைவான், ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஹான்சன் அவர்களின் ஆராய்ச்சி உலக வெப்பமயமாதல், அதனால் ஏற்பட இருக்கும் ஆபத்துகள், கால நிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அமைந்திருந்தது. இது தொடர்பாக அவர் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வினை ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டு வந்துள்ளார்.

இராமநாதன் அவர்களின் ஆராய்ச்சி ஆரம்ப காலங்களில் இருந்தே பருவ நிலை மாறுபாட்டால் புவி சந்திக்க இருக்கும் பிரச்சனைகளைப் பற்றியதாக இருந்தது. இவருடைய கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமாக அமைந்தது குளோரோ புளோரோ கார்பன் மற்றும் இதர வாயுக்களால் ஏற்படும் பசுமைக் குடில் விளைவுகள் பற்றியதாகும். இவருக்கு டாங் பரிசு “மக்கள் மத்தியில் காற்று மாசுபடுதல் காரணமாக ஏற்படும் விளைவுகள் பற்றி விஞ்ஞானப் பூர்வமாக அவர் நிருபித்ததிற்காகவும், அதற்காக என்னென்ன தீர்வுகளை மேற்கொள்ளலாம் என்று கூறியதற்காகவும்” வழங்கப்பட்டிருக்கின்றது.

வீரபத்திரன் ராமநாதன் தமிழ்நாட்டில் இருக்கும் மதுரையில் பிறந்தவர். எஞ்சினியரிங் டிகிரியை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close