/indian-express-tamil/media/media_files/2025/08/16/tamil-nadu-government-whatsapp-services-2025-08-16-11-58-11.jpg)
இ.பி. பில், ரேசன் கார்டு முதல் மெட்ரோ டிக்கெட் வரை... அரசின் 50 சேவைகள் இனி வாட்ஸ்அப்பில்!
தமிழக அரசின் 50 அத்தியாவசிய சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலம் பெறும் வகையில், தமிழக அரசுக்கும் சமூக வலைத்தள நிறுவனமான மெட்டாவுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் இறுதி செய்யப்பட்டது.
மக்கள் ஒரே ஒரு எண் மூலம் அணுகக்கூடிய வகையில் இந்தச் சேவைக்கான 'சாட்பாட்' உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள மக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்தபடியே இந்த 50 சேவைகளையும் எளிதாகப் பெற முடியும். இந்தச் சேவை ஆரம்பத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வழங்கப்படும்.
இந்தச் சாட்பாட் மூலம் மின்சாரக் கட்டணம், குடிநீர்க் கட்டணம், வரி செலுத்துதல், ரேஷன் கார்டு தொடர்பான சேவைகள், அரசுப் பேருந்து டிக்கெட் மற்றும் மெட்ரோ ரயில் டிக்கெட் எடுப்பது போன்ற பல்வேறு சேவைகளைப் பெற முடியும். இதன் மூலம் மக்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் குறையும்.
இதுகுறித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "மக்களை மையமாகக் கொண்ட, உறுதியான நிர்வாகத்தை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்திற்கு வழிகாட்டும் தொலைநோக்குப் பார்வையை தமிழக அரசு கொண்டுள்ளது. மெட்டா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருப்பது இந்தப் பயணத்தில் ஒரு முக்கியப் படி. அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளத்துடன் இணைப்பதன் மூலம், மக்களுக்குச் சேவைகளை எளிமையாகக் கிடைக்கச் செய்வதுடன், தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒருங்கே ஏற்படும்" என்று தெரிவித்தார். இந்த ஒப்பந்தம், அரசு சேவைகளை மிக விரைவாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.