கூகுள் டிரான்ஸ்லேட் (கூகுள் மொழிபெயர்ப்பு)பற்றி நமக்கு நன்கு தெரியும். நாமும் பல முறை பயன்படுத்தி இருப்போம். எந்த ஆங்கில வார்த்தையை உள்ளிட்டாலும் அதற்கான தமிழ் அர்த்தம் மறுபக்கம் காட்டும். தமிழ் மட்டுமல்ல, பல இந்திய மற்றும் சர்வதேச மொழிகளை கூகுள் மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தின் உதவியுடன் மொழிபெயர்க்கலாம்.
சரி, குறைந்த எண்ணிக்கையிலான வார்த்தைகளை கூகுள் உதவியுடன் மொழிபெயர்த்துவிடலாம்.
புத்தக பப்ளிஷிங் ஹவுஸ், இணையதளம் போன்ற பல நூறு, ஆயிரக்கணக்கான மற்றும் லட்சக்கணக்கான வார்த்தைகள் மொழிபெயர்க்கப்பட வேண்டுமென்றால் என்ன செய்வது? அது மிகவும் பெரிய பணியாயிற்றே!
அதற்கு உதவும் தொழில்நுட்பம் பற்றி தான் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.
இந்திய மொழிகளை மொழிபெயர்ப்பதற்காக இந்தியாவிலேயே இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த பிரபந்தக் (Prabandhak). மேலே குறிப்பிட்டது போல் பல நூறு, ஆயிரம், லட்சக்கணக்காண வார்த்தைகளை மொழிபெயர்க்க இதனால் முடியும்.
‘பிரபந்தக்’ செயற்கை நுண்ணறிவு திறனுடன் செயல்படக் கூடியது. மொழிபெயர்ப்பாளர்கள், மொழிபெயர்ப்பு சேவை வழங்குபவர்கள், மொழிபெயர்ப்பு சேவை தேவைப்படும் நிறுவனங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் இணைக்கும் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பு தளம் பிரபந்தக் தான்.
புராஜெக்ட்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஃப்ரீலான்சர் மொழிபெயர்ப்பாளர்கள், மொழிபெயர்ப்பு சேவை அளிப்பவர்கள் ஆகியோர் சங்கமிக்கும் தளமாக பிரபந்தக் திகழ்கிறது.
பிரபந்தக் உதவியுடன் தமிழ், ஹிந்தி, பெங்காலி, பஞ்சாபி, அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, ஒடியா, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்க முடியும். இது கிளவுட் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
மற்ற மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்துக்கும் பிரபந்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
அது பற்றி பார்ப்போம்.
மற்றவைகளில் இல்லாமல் இதில் இடம்பெற்றுள்ள சில சிறப்பம்சங்கள்:
*11 இந்திய மொழிகளை ஆதரிக்கிறது.
*செயற்கை நுண்ணறிவுடன் செயல்படுகிறது.
*எந்த மொழியில் தட்டச்சு செய்ய வேண்டுமோ அதற்காக பிரத்யேகமாக தட்டச்சு செய்யும் வசதி உள்ளது. thamizh என்று ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழ் என்று வந்துவிடும். இந்த சிறப்பு வசதி இருப்பதன் காரணமாக நீங்கள் தட்டச்சு செய்யத் தெரியவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டியதில்லை தானே!

*எழுத்துப்பிழையை சரிபார்க்கும் (spell checker) வசிதியும், அகராதியும் (dictionary) உள்ளது.
*இதில் Neural Machine Translation என்ற சிறப்பம்சமும் உள்ளது. அதாவது, தானாகவே மொழிபெயர்க்க வேண்டிய வாக்கியங்களுக்கு இதுதான் அர்த்தம் என்று மொழிபெயர்க்க வேண்டிய மொழிக்கு மொழிபெயர்த்து காண்பித்து விடும். அதில் சிறு மாற்றங்களை செய்து நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
*இதுதவிர, 10 முதல் 15 வார்த்தைகளை தனியாகப் பிரித்து பல பிரிவுகளாக கொடுத்துவிடும். இதன்காரணமாக நாம் ஒவ்வொரு வாக்கியங்களையும் புரிந்துகொண்டு எளிமையாக மொழிபெயர்க்க முடியும்.
*ஒரு நாளில் மொழிபெயர்ப்பாளர் எவ்வளவு வார்த்தைகளை மொழிபெயர்க்கிறார் என்பதையும் பார்க்கலாம்.
*மொழிபெயர்க்கப்பட்டவைகளை பல வகை கோப்புகளாகவும் பதிவிறக்க முடியும். அதேபோன்று, எந்த வகையான கோப்புகளையும் பதிவேற்றி மொழிபெயர்க்கும் பணியைத் தொடங்க முடியும்.
பிரபந்தக் தொழில்நுட்பத்தை கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த ரெவெரி லாங்குவேஜ் டெக்னாலஜீஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
மொழிபெயர்ப்பாளர்களுக்கும், மொழிபெயர்ப்புத் துறையில் சாதிக்க துடிப்பவர்களுக்கும் ‘பிரபந்தக்’ ஓர் அரிய வரப் பிரசாதம் என்றால் அது மிகையல்ல!
இதுகுறித்து மேலும் தகவல்களை அறிந்துகொள்ள https://reverieinc.com/products/ai-powered-translation-management-hub/ என்ற இணையதளத்தைக் காணவும்.