திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்லி வரும் நிலையில், தற்போது தொழில்நுட்ப உதவியுடன் மெய்நிகரில் திருமணங்கள் நடைபெறும் காலத்திற்கு வளர்ச்சி அடைந்திருக்கிறோம்.
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டை சேர்ந்த ஜோடிக்கு, மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
தினேஷ் - ஜனக நந்தினி தம்பதிக்கு, ஓசூர் அருகேயுள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில் பிப்ரவரி 6 ஆம் தேதி திருமண நடைபெற்றது. அதனை தொடர்ந்து, மெட்டாவெர்ஸ் எனப்படும் மெய்நிகர் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், உலகம் முழுவதும் உள்ள நண்பர்களும், உறவினர்களும் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மெட்டாவெர்ஸ் எனப்படும் இணைய உலகில், நிஜத்தை போலவே டிஜிட்டல் அவதார் வழியாக உரையாடலாம். இது, ஆக்மென்டட் ரியாலிட்டி, பிளாக்செயின் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பத்தின் பல கூறுகளை ஒருங்கிணைக்கிறது.
இதுகுறித்து பேசிய தினேஷ், " கொரோனா பெருந்தோற்று காரணமாக, திருமண நிகழ்வில் பங்கேற்ப்போருக்கு கட்டுப்பாடுகள் இருந்தன. இதன் காரணமாக, திருமணத்தை குறைந்த அளவிலான மக்கள் முன்னில்லையில் நடத்திவிட்டு, வரவேற்பு நிகழ்வை மெட்டாவெர்ஸில் நடத்த திட்டமிட்டேன். நான் ஏற்கனவே ஒரு வருடமாக பிளாக்செயின் தொழில்நுட்பத்தில், அதனை குறித்து புரிதல் இருந்தது என்றார்.
தினேஷும், ஜனகநந்தினியும் ஹாரிபாட்டர் ரசிகர்கள் என்பதால், திருமண வரவேற்பை ஹாக்வார்ட்ஸ் தீமில் நடத்தியிருந்தனர். இந்த திருமண வரவேற்பின் பணிகளை கடந்த ஒரு மாதமாக ஸ்டார்ப் அப் நிறுவனமான TardiVerse மேற்கொண்டது. மணமகன், மணமகள், விருந்தினர்கள் என அனைவரது அவதார்களையும் பிரத்யேகமாக உருவாக்கினர். கூடுதல் சிறப்பு அம்சமாக, இறந்துபோன மணமகளின் தந்தையும் 3D அவதார் மூலம் தத்ரூபமாக மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பில் கொண்டு வந்திருந்தனர்.
இந்த மெட்டாவெர்ஸ் திருமண வரவேற்பின் புகைப்படமும், வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
திருமண வரவேற்பின் போது, சென்னையை சேர்ந்த பிரபல இசைக்குழுவினரின் நிகழ்ச்சியையும் வீடியோவில் பார்க்கமுடிகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சி என்பதற்கு இந்த திருமண வரவேற்பு சிறந்த எடுத்துகாட்டாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil