திருச்சி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தில் நாளுக்கு நாள் பி.எஸ்.என்.எல் மொபைல் சேவைக்கு மாறும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டு உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பி.எஸ்.என்.எல் துணை பொது செயலாளர் விஜயபாஸ்கரன் கூறுகையில்,
திருச்சி பி.எஸ்.என்.எல் மண்டலத்தில் 4ஜி நெட்வொர்க் கொடுப்பதற்கு தற்போது அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வருடம் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 4ஜி சேவை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும். ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய பி.எஸ்.என்.எல் திருச்சி மாவட்ட சேவையில் 715 இடங்களில் டி.சி.எஸ் நிறுவனத்துடன் இணைந்து 4ஜி நெட்வொர்க் சேவை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கிறோம்.
கடந்த ஜூலை மாதம் 3-ம் தேதி மற்ற செல்போன் நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியது. வாடிக்கையாளர்களுக்கு துயர சேதி. பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி. கடந்த ஜூன் மாதம்4500 பி.எஸ்.என்.எல் மொபைல் இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஜூலை25ஆம் தேதி வரை 15,500 பேருக்கு பிஎஸ்என்எல் மொபைல் சேவை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3.875 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஏற்கனவே பிஎஸ்என்எல் நெட்வெர்க்கிலிருந்து மற்ற நெட்வொர்க் மாறும் சதவீதம் 6.29 அதிகரித்து இருந்தது. தற்போது 0.4 சதவீதம் ஆக குறைந்துள்ளது. எண்ணிக்கையில் பார்க்கும்போது 4000 பேர் மற்ற நெட்வொர்க்குக்கு மாறுபவர்களாகவும் 600 பேர் பி.எஸ்.என்.எல்சேவைக்கு வந்ததாகவும் இருந்தனர். தற்போது 4077 பேர் பிஎஸ்என்எல் சேவைக்கு வந்துள்ளனர்.1689 பேர்வெளியில் சென்றுள்ளனர்.
15,500 வாடிக்கையாளர்கள் தற்போது பிஎஸ்என்எல் நெட்வொர்க் சேவைக்கு வந்துள்ளனர். மூன்று மடங்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். 2ஜி 3ஜி சேவை வைத்திருக்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவைக்கு எவ்வித கட்டணம் இன்றி மாறி தங்களது சிம் கார்டை பெற்றுக் கொள்ளலாம். திருச்சி மாவட்டத்தில் 300 பகுதிகளில் 4ஜி சேவை விரைவில் துவங்க உள்ளது. ஐந்து மாவட்டங்களில் 715 இடங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவையை கொடுக்க உள்ளது.
மணப்பாறை கண்ணூத்து பகுதியில் 75 வருடமாக மொபைல் சேவை பயன்படுத்தப்படாத கிராமத்திற்கு 16.7.24 முதல் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை துவக்கி வைத்துள்ளோம். பச்சமலையில் 2 இடங்களில் 4g சேவை கொடுக்கப்பட்டுள்ளது. துறையூரில் 16 பகுதியில் பணி நடைபெற்று வருகிறது. வால்பாறை, பச்சமலை, கொல்லிமலை, சபரிமலை உள்ளிட்ட கோயிலில் பிஎஸ்என்எல் சேவை மட்டுமே கிடைக்கிறது என்று பெருமை உள்ளது.
எந்த லாப நோக்கமும் இல்லாமல் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பிஎஸ்என்எல் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. பேரிடர் காலங்களிலும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு கை கொடுத்துள்ளது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 3ஜி 4ஜி சேவை சரிவர கிடைக்காததால் வெறுப்புடன் இருந்தவர்களுக்கு இனிமேல் அது நிகழாது 4ஜி சேவை தடையின்றி பெறமுடியும் என்பதை உறுதிபட தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.