/indian-express-tamil/media/media_files/2025/10/13/bigboss-soundarya-2025-10-13-15-52-36.jpg)
'டிஜிட்டல் அரெஸ்ட்' என்றால் என்ன? நடிகை சௌந்தர்யா சிக்கியது எப்படி? சைபர் கிரைம் கும்பலின் புதிய உத்திகள்!
அண்மை காலமாக, சாதாரண மக்களை அச்சுறுத்திவந்த சைபர் கிரைம் மோசடி, இப்போது பிரபலங்களையும் குறிவைக்க ஆரம்பித்துள்ளன. பிக்பாஸ் நடிகை சௌந்தர்யா ஃபெட்எக்ஸ் (FedEx) கொரியர் பெயரில் நடந்த அதிநவீன தொழில்நுட்ப மோசடியில் சிக்கி ரூ. 17.5 லட்சம் இழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த மோசடியில் பயன்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்ப உத்தி மற்றும் விழிப்புணர்வு குறித்து இங்கே காண்போம்.
மோசடியில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உத்திகள்
சின்னத்திரை நடிகை சௌந்தர்யாவிடம் பணம் பறிக்க மோசடி கும்பல் பயன்படுத்திய உத்திகள், இது சாதாரண மோசடி அல்ல, திட்டமிடப்பட்ட 'டெக் ஸ்கேம்' (Tech Scam) என்பதைக் காட்டுகிறது.
1. பெயரைக் கடத்தும் போலி அழைப்பு (Vishing/Spoofing)
மோசடி கும்பல் முதலில், இந்தியாவின் நம்பகமான கொரியர் நிறுவனமான ஃபெட்எக்ஸ் பெயரில் பேசியுள்ளது. தங்கள் பெயரில் போதைப் பொருள் பார்சல் அனுப்பப்பட்டதாகக் கூறியது, பாதிக்கப்பட்டவர் உடனடியாகப் பதற்றமடையச் செய்யப் பயன்படுத்தப்பட்ட முதல் உத்தி. இது, உண்மையான அலுவலக எண்ணைப் போலக் காட்டிக்கொள்ளும் Vishing அல்லது Spoofing தொழில்நுட்பத்தின் மூலம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம்.
2. சிபிஐ மிரட்டல் மற்றும் ஆவணங்களின் போலி நகல்கள் (Impersonation & Phishing)
அடுத்தகட்டமாக, தங்களை சி.பி.ஐ அதிகாரி எனக்கூறி, ராகேஷ் சர்மா என்ற பெயரைக் குறிப்பிட்டு, விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும், சிபிஐ வழக்கு ஆவணங்கள் மற்றும் ஆர்பிஐ ஆவணங்கள் என இரண்டையும் வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளனர். சௌந்தர்யா உண்மையாக நம்பும்படி, பிரபலமான மற்றும் நம்பகமான அமைப்புகளின் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியது ஒரு கிளாசிக் 'ஃபிஷிங்' (Phishing) உத்தி ஆகும். இந்த ஆவணங்களைப் பார்த்ததும், இது உண்மைதான் என நம்பி, பணப் பரிமாற்றம் செய்ய சௌந்தர்யா முன்வந்துள்ளார்.
3. ஸ்கைப் மூலம் 'டிஜிட்டல் அரெஸ்ட்' (Digital Arrest via Skype)
இந்த மோசடியின் உச்சக்கட்டத் தொழில்நுட்ப உத்தி, ஸ்கைப் கால் மூலம் நடிகையை 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்ததுதான். நேரில் ஆஜராகாமல், காணொலி அழைப்பு மூலம் மிரட்டி, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் குறித்து விசாரிப்பது போல் நடித்துப் பதற்றத்தை அதிகரித்து, பணத்தைப் பறித்துள்ளனர். இந்த உத்தியானது, தொலைதூரத்தில் இருந்துகொண்டே பாதிக்கப்பட்டவரை மனதளவில் அதிக நெருக்கடிக்கு உள்ளாக்கி, தர்க்கரீதியான சிந்தனையைத் தடுக்கும் நோக்கத்துடன் பயன்படுத்தப்படுகிறது.
4. சிக்கலான பணப் பரிமாற்றம் (Layering & Multiple Accounts)
வழக்கமாக ஒரே ஒரு வங்கிக் கணக்கைக் கொடுத்து பணத்தை மாற்றச் சொல்லும் மோசடி கும்பல், இதில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அசாம், குஜராத், போபால் எனப் பல்வேறு மாநிலங்களில் உள்ள 9 வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பச் சொல்லியுள்ளது. இது, தாங்கள் கொள்ளையடித்த பணத்தைக் கண்டறியும் தடயங்களை அழிக்கும் 'லேயரிங்' (Layering) என்ற பணமோசடி உத்தியாகும். பல்வேறு மாநில அக்கவுண்ட்டுகளுக்குப் பணத்தைப் பிரித்து அனுப்புவது, காவல்துறையினர் உடனடியாகப் பணத்தை முடக்குவதையும், மோசடி நபர்களைக் கண்டுபிடிப்பதையும் மிகவும் கடினமாக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது.
நடிகை சௌந்தர்யா இந்தச் சம்பவத்தை விழிப்புணர்வு வீடியோவாக வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் இதுபோன்ற மோசடி அழைப்புகளை எடுத்தாலோ? அல்லது தேவையற்ற லிங்குகளை கிளிக் செய்தாலோ? அதை கிளிக் செய்ய வேண்டாம், அது ஆபத்தானது என்று வலியுறுத்தி உள்ளார்.
எந்தவொரு அரசு நிறுவனமும் தொலைபேசி வழியாக, போதைப் பொருள் அல்லது சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தாது, பணத்தை வங்கிக்கு அனுப்பச் சொல்லாது. சிபிஐ, ஆர்.பி.ஐ போன்ற மத்திய நிறுவனங்கள் ஒருபோதும் வாட்ஸ்அப் அல்லது ஸ்கைப் மூலம் ஆவணங்களை அனுப்பவோ, பணத்தைக் குறிப்பிட்ட கணக்கிற்கு அனுப்பச் சொல்லவோ மாட்டார்கள். இதுபோன்ற மிரட்டல் அழைப்புகளைப் பெற்றால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது தேசிய சைபர் க்ரைம் போர்ட்டலில் புகார் அளிப்பதே சரியான நடவடிக்கை என்கின்றனர் சைபர் வல்லுநர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.