மின்சார வாகனங்கள் அதிகரிக்கும் காலகட்டத்தில், பதஞ்சலி நிறுவனம் தங்களது மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இந்தியாவில் இந்நிறுவனத்திற்கு தனி அடையாளம் தேவையில்லை. ஆனால், மருந்துகள் மற்றும் அழகு பொருட்களில் முன்னணி நிலையில் உள்ள பதஞ்சலி, தற்போது ஆட்டோமொபைல் துறையில் கால் வைப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இணையதளங்களில் வெளியான தகவலின்படி, இந்த ஸ்கூட்டர் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 440 கி.மீ தூரம் பயணிக்கக்கூடும் என கூறப்படுகிறது. இது, தற்போது சந்தையில் உள்ள சில பிரபல மாடல்களையும் மிஞ்சும் அளவில் உள்ளது. எடுத்துக்காட்டாக, சிம்பிள் ஒன் 5.0 kWh பேட்டரியுடன் 248 கி.மீ. வரை செல்கிறது. அல்ட்ரா வயலட் டெசராக்ட் 6 kWh பேட்டரியுடன் 261 கி.மீ. வரை செல்லும் திறன் கொண்டது.
இதற்கிடையில், பதஞ்சலி ஸ்கூட்டர் எந்த அளவிலான பேட்டரி பயன்படுத்துகிறது என்பதை துல்லியமாக அறிவிக்கவில்லை. பேட்டரி பிரிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் சில வலைத்தளங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த தகவல்களுக்கு மேலாக, ஸ்கூட்டரின் விலை ரூ.14,000 என்றும் கூறப்பட்டது. இதுபோன்ற விலை ஒரு முழுமையான மின்சார ஸ்கூட்டருக்கு சாத்தியம் அல்ல என்பதே பலரது கருத்தாகும்.
இதனால், இந்த தகவல்கள் ஏப்.1-ஐ முன்னிட்டு உருவாக்கப்பட்ட பொய் என சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த வகை பரபரப்பான தகவல், சந்தையில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. பதஞ்சலி மின்சார ஸ்கூட்டர் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகாத நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த விபரங்கள் மிகுதியான எதிர்பார்ப்பையும் சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளது. எனவே, நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இதுபோன்ற தகவல்களை நம்புவது அவசியமில்லை. மின்சார வாகனங்களை ஆர்வமுடன் எதிர்பார்க்கும் மக்களுக்கு இது ஒரு மந்தமான தொடக்கமாகத் தோன்றலாம், ஆனால் உண்மையான தகவல்களுக்காக சற்று காத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இந்த ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்து பதஞ்சலி (அ) பாபா ராம்தேவிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. பதஞ்சலி ஆயுர்வேதத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது சமூக ஊடகத்தில் இதுகுறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. தற்போது, இந்தியாவில் 2–3 kW பேட்டரியை மின்சார ஸ்கூட்டர்கள் பயன்படுத்தும்போது, 440 கி.மீ. வரம்பைப் பெற குறைந்தபட்சம் 8–10 kWh பேட்டரிகள் தேவைப்படுகின்றன. தற்போதைய சந்தை சூழ்நிலையில் வெறும் 14,000 ரூபாய்க்கு மேம்பட்ட தொழில்நுட்ப ஸ்கூட்டரை சந்தைக்கு கொண்டு வருவது சாத்தியமற்றது. உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்களால் செய்ய முடியாததை, பதஞ்சலி செய்வது சாத்தியமற்றது என்கின்றனர் நிபுணர்கள்.