/indian-express-tamil/media/media_files/2025/09/22/temper-glass-2025-09-22-08-41-51.jpg)
டெம்பர் கிளாஸ் உங்க போனைப் பாதுகாக்குமா? பாதுகாப்பு கவசமா? வியாபார தந்திரமா?
இன்றைய நவீன உலகில், ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு நொடிகூட வாழ முடியாது என்ற நிலை வந்துவிட்டது. புது போன் வாங்கியதும் நாம் முதலில் செய்யும் வேலை, அதற்கு ஒரு டெம்பர் கிளாஸ் (Temper Glass) வாங்குவதுதான். "போன் ஸ்க்ரீன் உடையாமல் இருக்க கண்டிப்பா இதை வாங்குங்க" என கடைக்காரர் சொன்னதும், அதை பாதுகாப்பு கவசமாகக் கருதி வாங்கி ஒட்டிவிடுகிறோம். ஆனால், உண்மையில் இது உங்க போனுக்கு முழுமையான பாதுகாப்பு கவசமா? வெறும் வியாபார யுக்தியா? இதற்கான சில சுவாரசியமான பதில்களை பார்க்கலாம்.
டெம்பர் கிளாஸ் என்றால் என்ன?
டெம்பர் கிளாஸ் என்பது ஒரு வகை வலுவூட்டப்பட்ட கண்ணாடி. இது சாதாரண கண்ணாடியை விட ஐந்து மடங்கு அதிக வலிமை கொண்டது. உங்கள் போன் கை தவறி கீழே விழுந்தால், போனின் அசல் திரைக்குப் பதிலாக இந்த டெம்பர் கிளாஸ் முதலில் உடைந்து, போன் திரையைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உங்கள் போனுக்கு ஒரு கவசம் போல செயல்படுகிறது.
எல்லா போன்களுக்கும் அவசியமா?
நவீன ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) போன்ற உயர் ரக பாதுகாப்பு கண்ணாடிகளுடன் வருகின்றன. இவை கீறல்கள் மற்றும் சாதாரண விபத்துகளிலிருந்து போனைப் பாதுகாக்கப் போதுமான வலிமை கொண்டவை. ஆனாலும், டெம்பர் கிளாஸ் என்பது ஒரு கூடுதல் பாதுகாப்புதான். போன் கை தவறி கீழே விழுந்தால், இது முழுமையாக உடைவதிலிருந்து உங்கள் திரையைக் காப்பாற்றலாம். ஆனால், ஒரு உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்தால், டெம்பர் கிளாஸ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் போன் திரை உடைய அதிக வாய்ப்பு உள்ளது.
டெம்பர் கிளாஸ் ஏன் பிரபலமானது?
போனின் ஸ்க்ரீன் உடைவதைவிட, டெம்பர் கிளாஸ் உடைவது குறைவான செலவு. டெம்பர் கிளாஸ் உடைந்தால், அதை எளிதாக மாற்றிவிடலாம் என்ற மன அமைதி கிடைக்கிறது. இதுவே பலரும் இதை விரும்புவதற்கான முக்கியக் காரணம். டெம்பர் கிளாஸ் உற்பத்திக்கு ஆகும் செலவு குறைவு, ஆனால் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இது கடைகளுக்கு ஒரு பெரிய வருமான ஆதாரமாக உள்ளது. இது இதன் பிரபலத்திற்கு ஒரு முக்கியக் காரணம்.
இன்று டெம்பர் கிளாஸ்களில் பல வகைகள் கிடைக்கின்றன. கண்களைப் பாதுகாக்கும் ப்ளூ லைட் ஃபில்டர், மேட் ஃபினிஷ், முழு திரையையும் மூடும் கிளாஸ் என விதவிதமான தேர்வுகளை இது வழங்குகிறது. டெம்பர் கிளாஸ் என்பது உங்கள் போன் பாதுகாப்பிற்கு ஒரு முழுமையான உத்தரவாதம் என்று சொல்ல முடியாது. அது ஒரு கூடுதல் பாதுகாப்பு முயற்சி மட்டுமே.
உங்க போனை நீங்கள் அடிக்கடி தவறவிடுபவராக இருந்தால், நல்ல தரமான டெம்பர் கிளாஸ் போடுவது புத்திசாலித்தனமான நடவடிக்கை. ஆனால், அதுவே உங்கள் போன் பாதுகாப்பான சூழலில் பயன்படுத்தப்படுகிறது என்றால், அது அவ்வளவு அவசியமில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.