/indian-express-tamil/media/media_files/2025/10/30/google-maps-2025-10-30-14-09-29.jpg)
ஸ்ட்ரீட் வியூ, 360° காட்சி, டைம் லேப்ஸ், 3D... டெக் உலகில் புரட்சி ஏற்படுத்திய கூகுள் மேப்ஸ்-ன் கதை!
இன்று ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரின் பயணத்திற்கும், வழிகாட்டியாகவும், உலகை வீட்டிலிருந்தே சுற்றிப்பார்க்கவும் உதவும் ஒரு அற்புதம்தான் கூகுள் மேப்ஸ் (Google Maps). வழி தெரியாத ஊரிலும், போக்குவரத்து நெரிசலிலும் சிக்காமல் நம்மை இலக்கை அடைய வைக்கும் இந்தச் செயலி, வெறும் வரைபடம் அல்ல; பில்லியன் கணக்கான தகவல்களின் தொகுப்பு. கூகுள் மேப்ஸ் எப்படித் தயாரிக்கப்பட்டது, அது எப்படித் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது, மற்றும் அதன் சுவாரசியமான அம்சங்கள் என்னென்ன என்று இங்கே காணலாம்.
கூகுள் மேப்ஸ் எப்படித் தயாரிக்கப்பட்டது?
கூகுள் மேப்ஸின் கதை ஆஸ்திரேலியாவில் உள்ள சிறிய நிறுவனத்தில் இருந்து தொடங்குகிறது. கூகுள் மேப்ஸ், முதலில் Where 2 Technologies என்ற ஆஸ்திரேலிய நிறுவனத்தால் லார்ஸ் மற்றும் ஜென்ஸ் ராஸ்முசென் (Lars and Jens Rasmussen) சகோதரர்களால் உருவாக்கப்பட்ட C++ டெஸ்க்டாப் புரோகிராம் ஆகும்.
2004 ஆம் ஆண்டு அக்டோபரில், கூகுள் இந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. அதன்பிறகு, அது ஒரு வெப் அப்ளிகேஷனாக (Web Application) மாற்றப்பட்டது. பிப்.2005-ம் ஆண்டு கூகுள் மேப்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது JavaScript, XML, மற்றும் Ajax போன்ற வலை மேம்பாட்டு நுட்பங்களைப் பயன்படுத்தியது. குறிப்பாக Ajax நுட்பம், முழுப் பக்கத்தையும் மறுபதிவேற்றம் செய்யாமல் (refresh) வரைபடத்தின் சிறிய பகுதிகளை மட்டும் உடனடியாகப் பதிவேற்றும் வசதியை வழங்கியது.
வரைபடத்தை உருவாக்க, கூகுள் பல அடுக்கு டேட்டாக்களை பயன்படுத்துகிறது. உயரமான பகுதிகள் மற்றும் பரந்த நிலப்பரப்புகளைப் படமெடுக்க செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. நகரங்களின் தெளிவான படங்களை, விமானங்களில் இருந்து 800 முதல் 1,500 அடி உயரத்தில் பறந்து எடுக்கப்படுகின்றன. 2007-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டீர் வியூ அம்சம், சிறப்பு கார்கள், 'ட்ரெக்கர்' கேமராக்கள், உள்ளூர் குழுக்கள் மூலம் தெருக்கள் மற்றும் கட்டிடங்களின் 360 டிகிரி புகைப்படங்களைச் சேகரிக்கிறது. சாலை நீளம், நிலப்பரப்பு மற்றும் தொலைவுகள் போன்ற முக்கியமான டேட்டாக்களை சேகரிக்க 1,000 க்கும் மேற்பட்ட 3-ம் தரப்பு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுடன் கூகுள் இணைகிறது.
கூகுள் மேப்ஸ் எப்படிப் புதுப்பிக்கப்படுகிறது?
உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது; புதிய சாலைகள், கட்டிடங்கள் மற்றும் வணிகங்கள் உருவாகின்றன. கூகுள் மேப்ஸ் இந்த மாற்றங்களைப் பிரதிபலிக்கத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும். பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் இருந்து வரும் ஜி.பி.எஸ். தகவல்கள் மூலம் நிகழ் நேர போக்குவரத்து நெரிசல் குறித்த தரவு நிமிடத்திற்கு நிமிடம் புதுப்பிக்கப்படுகிறது. இதுதான் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நமக்கு உதவுகிறது.
செயற்கைக்கோள் மற்றும் ஸ்ட்ரீட் வியூ படங்களில் உள்ள மாற்றங்களைக் கண்டறிந்து, சாலைகளின் எல்லைகள், கட்டிட அமைப்புகள் போன்றவற்றைத் தானாகவே புதுப்பிக்கக் கூகுள் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. உலகின் கோடிக்கணக்கான பயனர்கள் மற்றும் உள்ளூர் வழிகாட்டிகள் (Local Guides) மூலம், முகவரியில் உள்ள பிழைகள், புதிய வணிக இடங்கள் மற்றும் சாலை மாற்றங்கள் பற்றிய தகவல்களை நேரடியாகச் சமர்ப்பிக்க முடியும். இது துல்லியத்தை உறுதி செய்கிறது.
உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் மற்றும் வான்வழிப் படங்கள் வழக்கமான அடிப்படையில் புதுப்பிக்கப்படுகின்றன. பொதுவாக, முக்கியமான நகரங்களின் படங்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைக்கு மேல் புதுப்பிக்கப்படுகின்றன. கூகுள் தினமும் சுமார் 50 மில்லியன் டேட்டாக்களை மேப்ஸில் புதுப்பிப்பதாகக் கூறப்படுகிறது.
கூகுள் மேப்ஸின் சுவாரசியமான அம்சங்கள்
கூகுள் மேப்ஸ் வெறும் வழிகாட்டி மட்டுமல்ல, பல சுவாரசியமான அம்சங்களைக் கொண்டுள்ளது.
டைம் லேப்ஸ் (Time Lapse/Time Travel): கூகுள் எர்த் அல்லது மேப்ஸில் உள்ள இந்த அம்சம், ஒரு குறிப்பிட்ட இடம் கடந்த 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதைப் பார்க்க அனுமதிக்கிறது. வரலாற்று மாற்றங்களையும் வளர்ச்சியையும் இதன் மூலம் காண முடியும்.
லைவ் வியூ (Live View Navigation): நடக்கும் பயணிகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த அம்சம், கேமராவைப் பயன்படுத்தி, நிஜமான தெருக்களின் மீது அம்பு குறியீடுகள் மற்றும் திசைகளைக் காண்பிக்கும். இது இலக்கை அடைவதை மிகவும் எளிதாக்குகிறது.
3D காட்சி மற்றும் ஏரியல் வியூ (3D Model & Aerial View): பல நகரங்களின் 3D மாடல்களைப் பார்க்கலாம். மேலும், புத்துணர்ச்சியூட்டும் புதிய காட்சிகளைத் தரும் 'ஏரியல் வியூ' வீடியோக்களும் கிடைக்கின்றன.
வேக வரம்பு எச்சரிக்கை: நீங்க பயணிக்கும்போது அந்தச் சாலையின் வேக வரம்பை மீறினால், கூகுள் மேப்ஸ் உங்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் (சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு).
போக்குவரத்து நெரிசல்: பேருந்து அல்லது ரயில் போன்ற பொதுப் போக்குவரத்துத் தகவல்கள், வருகை நேரம், மற்றும் போக்குவரத்து நெரிசல் குறித்த நிகழ்நேரத் தகவல்களையும் இது வழங்குகிறது.
தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டி (Customized Routes): சுங்கச் சாவடிகள், கப்பல் பாதைகள் அல்லது குறுகிய சாலைகள் உள்ள பகுதிகளைத் தவிர்க்க நீங்கள் விரும்பும் வழியைத் தனிப்பயனாக்கலாம்.
கூகுள் மேப்ஸ், மனித உழைப்பு, அரசாங்க டேட்டா , செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் பில்லியன் கணக்கான பயனர்களின் நிகழ்நேரத் தகவல்கள் ஆகியவற்றின் சிக்கலான கலவையால் உருவாக்கப்பட்ட நவீன அதிசயம். இது நம் உலகை அறிந்துகொள்ளும் விதத்தை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us