/indian-express-tamil/media/media_files/2025/06/04/8X3wOPhtenGtwta8rXFk.jpg)
மனித கற்பனையை திரையில் கொண்டுவரும் கூகுளின் வியோ-3; டெக் உலகில் புரட்சி!
கூகுள் நிறுவனம் தனது வருடாந்திர டெவலப்பர் மாநாடான I/O 2025-ல், "வியோ 3" (Veo 3) என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோ ஜெனரேட்டரை அறிமுகப்படுத்தியது. இது டெக் உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், வீடியோ உள்ளடக்க உருவாக்கத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியோ 3 என்பது text prompts அல்லது image prompts உள்ளீடாகக் கொண்டு, உயர் தரமான வீடியோக்களை உருவாக்கும் திறன் கொண்டது. கூகுளின் டீப்மைண்ட் (DeepMind) பிரிவின் இந்த புதிய முயற்சி, முந்தைய வியோ மற்றும் வியோ 2 மாடல்களின் மேம்பட்ட பதிப்பாகும்.
இதற்கு முன்பு வந்த Veo மற்றும் Veo 2 மாடல்களை விட மேம்பட்ட அம்சங்களுடன் இந்த Veo 3 வெளிவந்துள்ளது. அதுவும் Veo 3 -ல் உரையாகவும் படங்களாகவும் கொடுக்கப்படும் உள்ளீடுகளுக்கு, நிஜமான உலகில் உள்ள இயற்பியலுடனும், சரியான உதட்டசைவுடனும் சத்தத்துடன் கூடிய வீடியோவை உருவாக்கி கொடுக்கப்படும் என்பதுதான் சிறப்பு.
கடந்த மே மாதம் இந்த Veo 3 அறிமுகம் செய்யப்பட்டபோது, 8 வினாடிகள் வரை 4k தரத்தில் வீடியோக்களை உருவாக்க முடிந்தது. அதுவும் ஒலி, உரையாடல்கள், மற்றும் சவுண்ட் எஃபெக்ட்ஸ் உட்பட சினிமா ஸ்டைல்களில் வீடியோக்களை உருவாக்க முடிந்ததாகப் பலர் தெரிவித்தனர். நிஜமாகத் தெரியும் காட்சிகள் முதல் அனிமேஷன், கற்பனை போன்ற அனைத்தையும் இந்த Veo 3 மூலம் உருவாக்க முடியும். குறிப்பாக இந்த ஏ.ஐ மாடலில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் நிஜ வீடியோகளைப் போலவே இருப்பதாகவும், வித்தியாசம் கண்டறியவே திணறுவதாகவும் பலர் கூறுகின்றனர்.
வியோ-3 முக்கிய சிறப்பம்சங்கள்:
வியோ 3, 4K தெளிவுத்திறன் வரை சுமார் 8 வினாடிகள் நீளமுள்ள வீடியோக்களை உருவாக்க முடியும். வெறும் காட்சிகள் மட்டுமல்லாமல், அதற்கேற்ற ஒலி விளைவுகள், கதாபாத்திரங்களின் உரையாடல்கள், பின்னணி இசை மற்றும் சுற்றுப்புற சத்தங்கள் ஆகியவற்றையும் வியோ 3 உருவாக்க முடியும். இதன் "லிப் சிங்க்" (lip syncing) திறனும் மிகவும் துல்லியமாக இருப்பதாகக் கூறப்படுகிறது, அதாவது கதாபாத்திரங்களின் வாய் அசைவுகள் அவர்கள் பேசுவதற்கேற்ப சரியாக இருக்கும். வியோ 3, நிஜ உலகக் காட்சிகள் (photorealism) முதல் அனிமேஷன், கற்பனை உலகம் (surrealism) வரையிலான பல்வேறு சினிமா பாணிகளை புரிந்துகொண்டு வீடியோகளை உருவாக்க வல்லது. சிக்கலான வர்ணனைகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப யதார்த்தமான அசைவுகள், லைட்டிங் மற்றும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகரமான வெளிப்பாடுகளுடன் கூடிய வீடியோக்களை உருவாக்கும் திறன் கொண்டது. கூகுள் ஃப்ளோ (Google Flow) உடன் ஒருங்கிணைப்பு: கூகுளின் மற்றொரு செயற்கை நுண்ணறிவு திரைப்பட உருவாக்கக் கருவியான ஃப்ளோ உடன் இணைந்து, வியோ 3 தொழில்முறைத் தரத்திலான வீடியோக்களை உருவாக்க உதவுகிறது.
உதாரணமாக நீங்கள் ஒரு குரங்கு மனிதர்களுடன் நடனம் ஆடும் வீடியோவை இதில் உருவாக்க சொன்னால், இது குரங்கின் நடன அசைவுகள், அதற்குத் தகுந்த லைட்டிங், மனிதர்களின் எதார்த்தமான ரியாக்ஷன்ஸ் என அனைத்தையும் நம்பமுடியாத அளவுக்கு தத்ரூபமாக உருவாக்கிக் கொடுக்கிறது என்பது தான் சிறப்பு.
அதேபோல் Veo 3 மாடலின் முக்கிய சிறப்பு என்னவென்றால், வீடியோ மட்டுமின்றி ஒலியையும் சேர்த்து கொடுக்கிறது. இதுதவிர கதாபாத்திரங்களின் உரையாடல்கள் சுற்றுப்புற சத்தங்கள் (உதாரணமா பறவைகள் சத்தம், தெரு சத்தம்) மற்றும் இசை எல்லாமே இதில் இருக்கிறது. குறிப்பாக மனிதர்களில் லிப் சிங்க் துல்லியமாக இருக்கிறது. அதாவது கதாபாத்திரங்கள் பேசுவதற்குத் தகுந்த வாய் அசைவுகள் சரியாக இருக்கிறது.
விலை?
Veo 3 வசதியைப் பயன்படுத்த மாதம் 250 அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் அப்டேட் இன்னும் இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை. தற்போது அமெரிக்காவில் கூகுள் ஜெமினி செயலியில் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே Veo 3 கிடைப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூடியூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) வீடியோக்களை உருவாக்க இந்த Veo 3 பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் Google DeepMind-இன் SynthID டிஜிட்டல் வாட்டர்மார்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்று அடையாளப்படுத்தி, டீப்ஃபேக்ஸ் மற்றும் தவறான தகவல்களைத் தடுக்க உதவுகிறது.
Veo 3 சிக்கல்கள்: ஏஐ வீடியோக்கள் தவறான தகவல்களைப் பரப்ப பயன்படுத்தப்படலாம். ஆனாலும் கூகுள் SynthID வாட்டர்மார்க் மற்றும் கண்டென்ட் ஃபில்டர்கள் மூலம் இதை தடுக்க முயற்சிக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த Veo 3 வருவதன் மூலம் வீடியோ எடிட்டிங், டப்பிங், ஆக்டிங் துறைகளில் வேலைவாய்ப்பு பாதிக்கலாம். இருந்தபோதிலும் Veo 3 ஆனது AI தொழில்நுட்பத்தின் ஒரு மைல்கல். குறிப்பாக இதற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும் என்று என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.