ரயில் பயணத்தின்போது, நீங்கள் அமர்ந்திருக்கும் பெட்டியின் மேலே, கைக்கு எட்டும் உயரத்தில், சிவப்பு சங்கிலி தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அது சாதாரணமான கயிறு என்று நினைத்திருக்கலாம். சரியான காரணத்திற்காக அதை இழுத்தால், சில நிமிடங்களில் ஓடும் ரயிலை முழுவதுமாக நிறுத்திவிடும் ஆற்றல் அதற்கு உண்டு.
ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் இந்தச் சங்கிலி, 'அலாரம் செயின் புல்லிங் சிஸ்டம்' என்ற தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம். பெரும்பாலான இந்திய ரயில்கள், நீண்ட குழாய் வழியாக அழுத்தப்பட்ட காற்றைப் பயன்படுத்தி பிரேக்குகளை இயக்கும் அமைப்பைக் கொண்டுள்ளன. இந்தக் காற்று, ரயிலின் பிரேக்குகளை லூஸ் ஆக வைத்திருக்கிறது.
நீங்கள் அவசரத்தில் சங்கிலியை இழுக்கும்போது, அந்த அழுத்தப்பட்ட காற்றை வெளியேற்றும் சிறிய வால்வு திறக்கிறது. காற்று அழுத்தம் குறைந்தவுடன், பிரேக் தானாகவே இறுக்கமடைந்து, ஒவ்வொரு பெட்டியின் சக்கரங்களையும் பூட்டுகிறது. சில நொடிகளில் அதிவேக ரயில் முழுவதுமாக நின்றுவிடுகிறது. சங்கிலி இழுக்கப்பட்டவுடன், ஓட்டுநருக்கு உடனே எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. இதன்மூலம், எந்த பெட்டியில் அவசரம் என்று அவருக்கு உடனடியாகத் தெரிந்துவிடும். இதனால் அவசர நேரங்களில் விரைந்து செயல்பட முடிகிறது.
ரயில் நின்றதும், ரயில்வே காவலர்கள் அல்லது ஊழியர்கள் உடனடியாக வந்து விசாரிப்பார்கள். நீங்கள் வேடிக்கைக்காகவோ (அ) தனிப்பட்ட காரணங்களுக்காகவோ சங்கிலி இழுத்திருந்தால், அது சட்டப்படி குற்றம். தேவையில்லாமல் சங்கிலியை இழுத்தவர்களுக்கு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்க இந்திய ரயில்வே சட்டத்தில் இடம் உண்டு. இந்த முறைகேடுகளைத் தடுக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்திய ரயில்வே புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. லோகோ பைலட்டுக்கு சரியான தகவலை அளிக்கும் மின்னணு அலாரம் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள், சங்கிலியை தேவையில்லாமல் இழுப்பவர்களை அடையாளம் காண உதவுகின்றன.
அவசரகாலங்களில் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டிய இந்தச் சங்கிலியை, விளையாட்டாக இழுப்பது ரயில் அட்டவணையை பாதிக்கிறது. இதனால் மற்ற ஆயிரக்கணக்கான பயணிகளுக்கும் தேவையற்ற தாமதமும் சிரமமும் ஏற்படுகிறது. இந்திய ரயில்வேயின் இந்த சிவப்பு சங்கிலி, வெறும் கயிறு அல்ல; பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சிக்கலான மற்றும் மிகவும் பயனுள்ள பாதுகாப்பு அமைப்பு. அதை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பது, சட்டத்தை மதிப்பது மட்டுமல்ல, சக பயணிகளின் பயணத்தையும் பாதுகாப்பதற்கான புத்திசாலித்தனமான செயல்.