/indian-express-tamil/media/media_files/2025/09/15/4k-ai-powered-soundbar-2025-09-15-14-05-53.jpg)
ஜெமினி ஏ.ஐ., டால்பி விஷன் வசதிகளுடன்... 3-இன்-1 ஸ்மார்ட் ZTE சவுண்ட்பார்!
ஒரு காலத்தில் சவுண்ட்பார் என்பது வெறும் ஸ்பீக்கர் சிஸ்டம் மட்டும்தான். ஆனால், இப்போது அது ஸ்மார்ட் டிவியையும், வீட்டையும் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பக் கருவியாக மாறியுள்ளது. தகவல் தொடர்பு தொழில்நுட்ப தீர்வுகளின் முன்னணி நிறுவனமான இசட்.டி.இ. கார்ப்பரேஷன் (ZTE Corporation), 2025 ஐபிசி கண்காட்சியில் தனது அடுத்த தலைமுறை 4K ஏ.ஐ-பவர்டு சவுண்ட்பாரை அறிமுகப்படுத்தி, வீட்டு பொழுதுபோக்குத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிநவீன சவுண்ட்பார், சாதாரண செட்-டாப் பாக்ஸ் மற்றும் சவுண்ட்பார் ஆகிய இரண்டின் வேலைகளையும் ஒரே கருவியில் செய்கிறது. இது, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஸ்மார்ட் ஹோம் கட்டுப்பாட்டு அம்சங்களுடன் வீட்டு பொழுதுபோக்கு அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. இந்த சவுண்ட்பாரில் உள்ள சக்திவாய்ந்த பிராசஸர், முந்தைய மாடல்களைக் காட்டிலும் 67% அதிக வேகத்தில் செயல்படுகிறது. அதேசமயம், மின்சார நுகர்வை 50% குறைப்பதால், ஆற்றல் சேமிப்பிலும் இது சிறந்து விளங்குகிறது.
3-இன்-1 வசதிகள்!
இந்த டிவைஸ், ஆடியோ-வீடியோ, ஏ.ஐ மற்றும் ஸ்மார்ட் ஹோம் கட்டுப்பாடு என 3 முக்கிய அம்சங்களை ஒருங்கிணைத்து, உங்கள் வீட்டுப் பொழுதுபோக்கை முழுவதுமாக மாற்றியமைக்கிறது.
திரையரங்கு அனுபவம் வீட்டிலேயே: இந்த சவுண்ட்பாரில், 3.1.2 ஒலி சேனல்களை ஆதரிக்கும் ஏழு பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் உள்ளன. அத்துடன், நீங்கள் விரும்பும் இடத்தில் வைத்துக்கொள்ளக்கூடிய 2 எக்ஸ்ட்ரா ஸ்பீக்கர்களையும் இணைத்துக்கொள்ளலாம். டால்பி அட்மாஸ் மற்றும் டால்பி விஷன் தொழில்நுட்ப ஆதரவுடன், வீட்டையே சினிமா தியேட்டராக மாற்ற முடியும். ஒலியில் ஆழத்தையும், காட்சியில் துல்லியமான நிறங்களையும் இது வழங்குகிறது.
ஜெமினி ஏ.ஐ உடன் வீட்டு கணினி மையம்: இதில் உள்ள 4 TOPS NPU (நியூரல் பிராசசிங் யூனிட்) மூலம், உங்கள் குரல் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படும் தனிப்பட்ட ஏ.ஐ உதவியாளரை உருவாக்கலாம். மேலும், வெளி கேமராவை இணைப்பதன் மூலம் ஏ.ஐ-யை பயன்படுத்தி உடற்பயிற்சி செய்வது, உடல் அசைவுகள் மூலம் கேம்கள் விளையாடுவது போன்ற புதிய அனுபவங்களையும் இது சாத்தியமாக்குகிறது.
ஸ்மார்ட் ஹோம் கட்டுப்பாட்டு மையம்: 2 மைக்ரோஃபோன்கள், மேட்டர் (Matter) தொழில்நுட்ப ஆதரவு இருப்பதால், பல்வேறு பிராண்டுகளின் ஸ்மார்ட் சாதனங்களை இந்த சவுண்ட்பார் மூலம் எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். வீட்டின் அனைத்து ஸ்மார்ட் சாதனங்களுக்கும் இதுவே மையமாகச் செயல்படும். வீட்டு ஊடக சாதனங்களில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் ZTE, இந்த புதிய சவுண்ட்பார் மூலம் வீட்டு தொழில்நுட்பத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.