கோவை அமிர்த விஷ்வ வித்யாபீடம் பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் மூன்று பேர் சேர்ந்து யார் உதவியும் இன்றி தானாக இயங்கும் வீல் சேரினை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தானாக இயங்கும் இந்த ஆட்டோமேட்டிக் வீல் சேரின் பெயர் செல்ஃ-இ (Self-E) ஆகும். இதில் பொருத்தப்பட்டிருக்கும் வழிகாட்டும் தொழில்நுட்பத்தின் (Autonomous Navigation System) உதவியுடன் பயனாளிகள் தாங்கள் விரும்பும் இடத்திற்கு யார் உதவியும் இன்றி செல்லலாம்.
ரோபாட்டிக் ஆப்ரேட்டிங் சிஸ்டம் இந்த வழிகாட்டும் தொழில்நுட்பத்தினை உபயோகப்படுத்தும் முறையினை எளிமைப்படுத்துகிறது. இந்த வீல் சேரில் பொருத்தப்பட்டிருக்கும் நேவிகேஷன் மேப்பில், பயனாளி செல்ல வேண்டிய இடத்தினை குறிப்பிட்டால் தானாக வீல் சேர் அந்த இடத்திற்கு பயணிக்கத் தொடங்கும்.
இந்தியாவில் இந்த வீல் சேர் நல்ல வரவேற்பினைப் பெரும் எனில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வீல் சேர்களைப் போல் இல்லாமல் மிகக் குறைந்த விலையில் விற்கப்படும்.
அந்த பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேசன் துறையின் துணைத்தலைவர் டாக்டர். ராஜேஷ் கண்ணன் மகாலிங்கம் இதைப் பற்றி குறிப்பிடுகையில் “வெளிநாடுகள் மற்றும் தொழில்நுட்ப கம்பெனிகளின் எந்த உதவியும் இன்றி, எங்களுடைய ஆய்வுக்கூடத்திலேயே தயாரிக்கப்பட்ட வீல் சேர் இது. இதனை விமான நிலையம் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளிகள் மற்றும் வீல் சேர் பயனாளிகளை வைத்து சோதனை நடத்த வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.
இதனை கண்டுபிடித்த சிந்தா ரவி தேஜா, சரத் ஸ்ரீகாந்த், மற்றும் அகில் ராஜ் இரண்டு வருடங்களாக இந்த கண்டுபிடிப்பிற்காக உழைத்துள்ளனர். லேசர் சென்சார் உதவியுடன் இயக்கப்படும் இந்த வீல் சேர் அசையும் மற்றும் அசையாப் பொருட்களினை கண்டறிந்து அதற்கு தகுந்தாற் போல் இயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.