TikTok Ban : Google Play store blocked the app : மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற செயலியாக இயங்கி வந்தது டிக்டாக் செயலி. ஆரம்பத்தில் செந்தில் - கவுண்டமணி நகைச்சுவை என்று துவங்கி வடிவேலுவில் டைலாக்குகளுக்கு நடிப்பது என்று சென்ற போது பார்ப்பவர்களுக்கு ரசனைக்குரியதாக இருந்தது டிக்டாக். சிலரோ, தங்களின் திறமைகளை வெளிப்படுத்த டிக்டாக் செயலிகளை பயன்படுத்தினர்.
ஆனால் நாட்களாக ஆக ஆபாச வீடியோக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் சமூகம் சீர்கெடுவதாக கூறி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
ஏப்ரல் 23ம் தேதி வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிக்டாக் செயலியை தடை செய்ய உத்தரவிட்டது. பைட்டான்ஸ் ( ByteDance) என்ற சீன நிறுவனத்தின் செயலி இதுவாகும்.
நேற்று நள்ளிரவில் இருந்து ப்ளாக் செய்யப்பட்ட டிக்டாக் செயலி
தடையை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அந்நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் மதுரைக் கிளையின் உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் சார்பில் கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் செயலிகள் தளத்தில் இருந்து டிக்டாக்கை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவில் இருந்து (16/04/2019) கூகுள் ப்ளேயில் அந்த செயலி ப்ளாக் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஏப்ரல் 24ம் தேதி நடைபெற உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததில் இருந்து சுமார் 60 மில்லியன் வீடியோக்களை தரமற்றதாக எண்ணி டிக்டாக் அழித்துள்ளது என்று தன் தரப்பு வாதத்தில் அந்நிறுவனம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : களைக்கட்டும் ஸ்மார்ட்போன் மார்க்கெட்… மே மாத புதுவரவுகள் என்னென்ன?