/indian-express-tamil/media/media_files/2025/10/02/walkingpal-2025-10-02-12-17-19.jpg)
தனிமைக்கு குட்பை: நடைப்பயிற்சியை உற்சாகமாக்க... புதிய ப்ரெண்ட்-ஐ இணைக்கும் 'வாக்கிங் பால்' ஆப்!
நடைபயிற்சி என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது நம் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத அவசியமாக மாறிவிட்டது. ஆனால், நம்மில் பலருக்குப் போதுமான உடல் இயக்கம் கிடைப்பதில்லை. ஆஃபிஸ் சென்றாலும் சரி, வீட்டிலிருந்து வேலை செய்தாலும் சரி, நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதுதான் பெரும்பாலானோரின் நிலையாக உள்ளது. இப்படி உட்கார்ந்திருப்பது நல்லதல்ல என்று மருத்துவர் முதல் அக்கம் பக்கத்தினர் வரை அனைவரும் சொல்கின்றனர். இதைக் கேட்டு நாம் தைரியமாக நடைப்பயிற்சிக்குக் கிளம்பினாலும், 4-வது நாளில் சலிப்பு வந்துவிடும். கூடவே ஒருவர் இருந்தால், நீண்ட தூரம் உற்சாகமாகச் செல்லலாமே என்ற எண்ணம் பலருக்கு உண்டு.
பெரும்பாலானோர் குழுக்களாகச் சேர்ந்து நடக்கிறார்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் செல்கிறார்கள். ஆனால், தனியாகச் செல்வது சலிப்பாக இருப்பதால், பலரும் வீட்டிலேயே இருக்கிறார்கள். இப்படித் தனிமையில் இருப்பவர்களுக்காகவோ அல்லது நடைப்பயிற்சியின்போது புதியவர்களைச் சந்திக்க ஆர்வமாக இருப்பவர்களுக்காகவோ, தற்போது ஒரு புதிய ஆஃப் வெளிவந்துள்ளது. அதன் பெயர்தான் 'வாக்கிங் பால்' (Walking Pal).
'வாக்கிங் பால்' என்பதற்குப் பொருள் 'நடைப்பயிற்சி நண்பா'. நீங்க தனியாக இருந்து, நடைப்பயிற்சிக்கு யாராவது துணை தேவைப்பட்டால், இந்த ஆஃப்பில் நீங்க முன்பதிவு செய்யலாம். நீங்க எங்கு நடக்கப் போகிறீர்கள் என்ற விவரங்களை உள்ளீடு செய்தால் போதும், ஆர்வமுள்ள மற்ற பயனர்கள் இந்த நடைப்பயணத்தில் உங்களுடன் இணைவார்கள். இதன் மூலம் சலிப்பு நீங்கி, உடல் செயல்பாடுகளும் அதிகரிக்கும். இந்த ஆஃப் உங்களின் தனிப்பட்ட தகவல்களையோ அல்லது நீங்கள் செல்லும் இடத்தின் முழுமையான விவரங்களையோ வெளிப்படுத்தாது. எனவே, தனியுரிமை சமரசம் செய்யப்படவில்லை என்ற நம்பிக்கையுடன் இதைப் பயன்படுத்தலாம்.
நீங்க வேறொரு ஊருக்குப் பயணம் செய்தாலும், அங்கும் உங்களுக்கு நடைப்பயிற்சி நண்பர் தேவைப்பட்டால், இந்த ஆஃப் மூலம் தேடலாம். தற்போது எல்லா ஊர்களிலும் உடனடியாக மக்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். ஆனால், நாளாக நாளாக இந்த ஆஃப்பில் அதிகமான மக்கள் இணையும்போது, இது நடைப்பயிற்சி ஆர்வலர்களின் ஒரு மிகப்பெரிய சமூகமாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை. இனி நடை பயிற்சியைத் தவிர்க்க வேண்டாம்; உங்களின் அடுத்த 'வாக்கிங் பால்' உங்களுக்காகக் காத்திருக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.