ஒரே சமயத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை அதிகமானோர் இணைத்து வருவதால், மின் வாரிய இணையதளத்தின் வேகத்தை அதிகரிக்க மின்சார வாரியம் கூடுதலாக 2 சர்வர்களை பொருத்தியுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்து வருகின்றனர்.
மேலும், தற்போது பலரும் தங்களுக்கான மின் கட்டணங்களையும் செலுத்தி வருகின்றனர். இந்தச் செயல்முறைகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகின்றன. அதாவது மின் கட்டணத்தை, மின் கட்டணம் செலுத்தும் மையங்கள் மட்டுமின்றி, மின்சார வாரிய இணையதளத்தில் நேரடியாகவும், மொபைல் போன் செயலியிலும் செலுத்தலாம்.
தற்போது, மின் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியும் ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், மின்சார வாரிய இணையதளத்தில் ஒரே சமயத்தில் பலரும் ஆதார் எண்ணை இணைத்து வருவதாலும், மின் கட்டணம் செலுத்தி வருவதாலும் இணையதள செயல்பாட்டின் வேகம் குறைந்தது. இதனால், மின் கட்டணம் செலுத்தவும், ஆதார் இணைக்கும் பணிக்கும் அதிக நேரமானது.
இந்த தாமதத்தைத் தவிர்க்கும் வகையில், மின்சார வாரிய இணையதளத்தில் விரைவாக மின் கட்டணம் செலுத்தவும், மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்கவும், மின் வாரியம் கூடுதலாக இரண்டு சர்வர்களை பொருத்தியுள்ளது.
அதாவது மின்சார வாரியம், ஏற்கனவே உள்ள இரண்டு சர்வர்களுடன், கூடுதலாக இரு சர்வர்களை பொருத்தியுள்ளது. வேகம் அதிகமானதை அடுத்து, பலரும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். நேற்று மாலை வரை, 26 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil