ஏப்ரல் 8, 2024 முழு சூரிய கிரகண நிகழ்வு நடைபெற உள்ளது. இது ஒரு அரிய கிரகண நிகழ்வாகும். இந்த அரிய நிகழ்வானது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்கா பகுதிகளில் நிகழ்கிறது. இருப்பினும் இது இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த வகையான கிரகணம் மிகவும் அரிதானது. வரும் இந்த முழு சூரிய கிரகணம் ஏப்ரல், 8, 2024 அன்று மதியம் 2:12 மணிக்கு தொடங்குகிறது. மறுநாள் அதிகாலை 2.22 வரை நீடிக்கும் என கூறியுள்ளனர்.
முழு சூரிய கிரகணம்
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது, சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து பூமியின் மீது நிழல் படும் போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
இந்த நிகழ்வின் போது, சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும். இந்நிகழ்வில் நிலவு, சூரியனின் ஒளியை பூமியின் சில பகுதிகளை விழுவதைத் தடுக்கிறது. முழு சூரிய கிரகணத்தின் போது சிலப் பகுதிகளில் சூரிய ஒளி படாமல் அடர்ந்த இருட்டு ஏற்படும்.
பள்ளிகள் விடுமுறை ஏன்?
தற்போது ஏப்ரல் 8-ல் ஏற்படும் இந்த அரிய முழு சூரிய கிரகண நிகழ்வு வட அமெரிக்கா உள்பட சில பகுதிகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்காவின் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் என்பதால் பாதுகாப்புக் காரணங்களுக்காக பல பள்ளிகள் அன்று விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு சூரிய கிரகணம் டெக்சாஸ், ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ், மிசோரி, நியூயார்க், பென்சில்வேனியா, வெர்மான்ட், இல்லினாய்ஸ், இந்தியானா, ஓஹியோ, நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் மைனே ஆகிய மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, சூரிய கிரகணம் சூரிய மின் உற்பத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஏழு ஆண்டுகளுக்குள் அமெரிக்காவில் ஏற்படும் இரண்டாவது சூரிய கிரகணம் இதுவாகும். இத்தகைய நிகழ்வுகள் மிகவும் அசாதாரணமானவை என்றாலும், அவை மின்சார அமைப்பு ஆபரேட்டர்களுக்கு ஒரு தனித்துவமான சிக்கலை ஏற்படுத்துகின்றன.
ஏப்ரல் 8-ம் தேதி முழு சூரிய கிரகண நிகழ்வை காண ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் உணவு மற்றும் எரிவாயுவை சேமித்து வைக்குமாறு டெக்சாஸ் அதிகாரிகள் உள்ளூர் மக்களை வலியுறுத்தியுள்ளனர். ஹேஸ் கவுண்டி, டெல் வால்லே, மேனர் மற்றும் லேக் டிராவிஸ் பள்ளி மாவட்டங்கள் ஏற்கனவே விடுமுறை அறிவித்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“