/indian-express-tamil/media/media_files/2025/08/24/travellers-2025-08-24-12-49-22.jpg)
ஜி.பி.எஸ் முதல் ஸ்மார்ட் லாக் வரை... சோலோ டிராவலர்களுக்கான 5 டெக் கேஜெட்டுகள்!
தனியாகப் பயணம் செய்வது என்பது தனித்துவமான அனுபவம். யாரும் இல்லாத சுதந்திரம், திட்டமிட வேண்டிய அவசியமில்லாத மனநிலை, விரும்பிய இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு எனப் பல நன்மைகள் உள்ளன. ஆனால், தனியாகப் பயணம் செய்யும்போது பாதுகாப்பு பற்றிய கவலைகள் தவிர்க்க முடியாதவை. குறிப்பாக, வெளிநாட்டிலோ அல்லது தொலைதூர இடங்களிலோ இருக்கும்போது, ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் மனதில் தோன்றுவது இயல்பு. தனியாகப் பயணம் செய்பவர்களுக்காக சில சிறப்பு கருவிகளை நவீன தொழில்நுட்பம் உருவாக்கியுள்ளது. இந்த 5 கருவிகள் உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, பயணத்தின் மீதான உங்கள் பயத்தைப் போக்கி, முழுமையாக அதை ரசிக்க உதவும்.
தனிநபர் அலாரம் & ஃப்ளாஷ்லைட் (Personal Alarm & Flashlight)
பயணத்தின்போது இருள் சூழ்ந்த தெருக்களிலோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலோ செல்லும்போது ஒருவித பதற்றம் ஏற்படுவது வழக்கம். அந்த நேரத்தில் திடீரென யாராவது உங்களைத் துரத்தினால், தப்பிக்க என்ன செய்வது? இதற்குத்தான் இந்தச் சிறிய தனிநபர் அலாரம் (Personal Alarm) மிக உதவியாக இருக்கும். இது உங்கள் சட்டைப் பையிலோ அல்லது பையிலோ எளிதாகப் பொருந்தும். ஆபத்தான சூழ்நிலையில், நீங்கள் இதை அழுத்தும்போது, காதை பிளக்கும் சத்தத்தை எழுப்பும். இந்தச் சத்தம் உங்களை அச்சுறுத்துபவர்களை விரட்டுவதோடு, சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களின் கவனத்தையும் ஈர்க்கும். அத்துடன், இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாத பாதைகளில் நடப்பதற்கு ப்ளாஷ்லைட் (Flashlight) மிக அவசியம். இது சிறியதாக இருந்தாலும், சரியான பாதையை உங்களுக்குக் காட்டும்.
போர்ட்டபிள் வைஃபை & சிக்னல் பூஸ்டர் (Portable Wi-Fi & Signal Booster)
புதிய இடங்களுக்குப் பயணம் செய்யும்போது, கூகுள் மேப்ஸ் (Google Maps) அல்லது வண்டி பதிவு செய்ய மொபைல் டேட்டா மிகவும் அவசியம். ஆனால், பொது இடங்களில் உள்ள வைஃபை பாதுகாப்பானது அல்ல, சில இடங்களில் வைஃபை சேவையே இருக்காது. அந்தச் சமயங்களில் கைகொடுப்பது போர்ட்டபிள் வைஃபை ஹாட்ஸ்பாட் (Portable Wi-Fi Hotspot). இது உங்கள் பயணத்தின்போது பாதுகாப்பான மற்றும் நம்பகமான இணைய இணைப்பை அளிக்கிறது. இதன் மூலம், எந்த நேரத்திலும் வழிகளைக் கண்டறியலாம், தங்குமிடங்களை முன்பதிவு செய்யலாம் அல்லது அவசரத் தொடர்புகளையும் மேற்கொள்ளலாம்.
நீங்கள் மலைகளுக்குச் செல்வது அல்லது தொலைதூர கிராமங்களுக்குச் செல்வது போன்ற ஆஃப்லைன் பயணங்களை விரும்புபவராக இருந்தால், சிக்னல் பூஸ்டர் (Signal Booster) மிக பயனுள்ளதாக இருக்கும். பலவீனமான மொபைல் சிக்னல்களை பலப்படுத்தி, தொலைதூரத்தில் இருந்தாலும் உங்கள் மொபைல் போனை பயன்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
ஸ்மார்ட் லாக் & போர்ட்டபிள் டோர் லாக் (Smart Lock & Portable Door Lock)
நீங்கள் ஹாஸ்டலில் (Hostel) தங்கியிருக்கும்போது, உங்கள் பொருட்கள் பாதுகாப்பாக உள்ளதா? என்ற சந்தேகம் உங்கள் மன நிம்மதியைக் கெடுக்கலாம். அதற்காகத்தான் இந்த ஸ்மார்ட் லாக் (Smart Lock) உள்ளது. இதை உங்கள் ஸ்மார்ட்போனைக் கொண்டே இயக்க முடியும். இதனால் உங்கள் பைகள், பெட்டிகள் அல்லது லாக்கர்களைப் பாதுகாப்பாக லாக் செய்து கொள்ளலாம். அதேபோல், நீங்கள் தங்கியிருக்கும் அறையில் கூடுதல் பாதுகாப்பை உணர்வதற்கு, போர்ட்டபிள் டோர் லாக் (Portable Door Lock) சிறந்த தேர்வாகும். இது கதவுக்குப் பின்னால் கூடுதல் பூட்டைச் சேர்ப்பதால், உங்களின் அனுமதியின்றி யாரும் உள்ளே நுழைய முடியாது.
சாட்டிலைட் போன் & அவசரகால பீகான் (Satellite Phone & Emergency Beacon)
நீங்கள் சாகசப் பயணங்களை விரும்புபவராக இருந்தால், இந்த 2 கருவிகளும் அவசியம். மொபைல் சிக்னல் இல்லாத காடுகள் அல்லது மலைப் பகுதிகளுக்குச் செல்லும்போது, சேட்டிலைட் போன் (Satellite Phone) உங்களை உலகின் எந்த இடத்திலிருந்தும் அவசரகால தொடர்புகளை மேற்கொள்ள உதவுகிறது.
மிகவும் அபாயகரமான சூழ்நிலைகளில், தனிநபர் லொகேட்டர் பீகான் (Personal Locator Beacon - PLB) உயிர்காக்கும் கருவியாகச் செயல்படும். இதன் பட்டனை அழுத்தினால், உங்கள் ஜிபிஎஸ் இருப்பிடத்துடன் அவசரகாலச் சேவைக்கு சிக்னலை அனுப்பி, உடனடியாக உதவியைக் கோர முடியும். இந்த 5 கருவிகளையும் உங்கள் பயணத்தின்போது உடன் வைத்துக்கொண்டால், பாதுகாப்பு பற்றிய பயம் இல்லாமல், உங்கள் தனிப் பயணத்தை முழுமையாக அனுபவிக்க முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.