உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் உரிமையாளருமான எலான் மஸ்க் ட்விட்டர் சமூகவலைதளத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். உரிமையாளரான முதலே பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். தலைமை செயல் அதிகாரி, மூத்த அதிகாரிகள் பணி நீக்கம் எனப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதோடு ‘ப்ளூ டிக்’ வசதிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தார்.
அரசியல் தலைவர்கள், சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் எனப் பலர் பயன்படுத்தும் ‘ப்ளூ டிக்’ வசதிக்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனஅறிவித்தார். ‘ப்ளூ டிக்’ வசதி தலைவர்கள், பிரபலங்களின் அதிகாரப்பூர்வ கணக்கை அடையாளம் காண பயன்படுத்துவதாகும்.
இந்நிலையில் இந்த வசதி பல நாடுகளில் அமல்படுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. ட்விட்டர் ப்ளூ சந்தா சேவைக்கான கட்டணத்தை ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்பிள், ஆண்ட்ராய்டு, வெப் என மூன்றுக்கும் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ட்விட்டர் மொபைல் மாத சந்தா ரூ.900 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் ட்விட்டர் பயன்பாடு விட வெப் ப்ளூ டிக் சந்தா கட்டணம் குறைவாக உள்ளது. ட்விட்டர் வெப் பயன்பாட்டிற்கு ரூ.650 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் இந்தியாவிலும் வெப் வெர்ஷனுக்கு ஆண்டு சந்தாவில் சலுகை வழங்குகிறது. அதன்படி ஆண்டுக்கு ரூ. .6800 ஆகும். அதாவது மாதத்திற்கு ரூ.566 ஆகும்.
ட்விட்டர் ப்ளூ வசதி பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. ‘எடிட் ட்விட்’ ஆப்ஷன், undo tweet, நீண்ட மற்றும் உயர்தர வீடியோக்கள் அப்லோட் செய்வது மற்றும் உரையாடலில் முன்னுரிமை ஆகிய அம்சங்களை வழங்குகிறது. மேலும், குறைந்த அளவிலான விளம்பரங்கள் போன்ற சலுகைகளை வழங்குகிறது.